விவசாயியிடம் அரிவாளை காட்டி மிரட்டியவர் கைது
பாளையங்கோட்டை அருகே விவசாயியிடம் அரிவாளை காட்டி மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.
பாளையங்கோட்டை:
பாளையங்கோட்டை அருகே சீவலப்பேரி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 57). விவசாயி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சீவலப்பேரி வடக்கு தெருவை சேர்ந்த இசக்கிபாண்டி (31) என்பவரின் உறவினரிடம் இருந்து 6½ செண்டு இடம் வாங்கினார். ஆனால் அந்த இடத்தை மாரியப்பன் தனது உறவினரை ஏமாற்றி குறைந்த விலைக்கு வாங்கியதாக இசக்கிபாண்டி நினைத்ததாக கூறப்படுகிறது.
இதனால் சம்பவத்தன்று வீட்டின் முன்பு நின்றுகொண்டு இருந்த மாரியப்பன் உள்ளிட்ட குடும்பத்தினரை அரிவாளை காட்டி இசக்கிபாண்டி மிரட்டினாராம்.
இதுகுறித்து மாரியப்பன் கொடுத்த புகாரின் பேரில் சீவலப்பேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிவு செய்து இசக்கிபாண்டியை கைது செய்தார்.