மோட்டார் சைக்கிளை திருடியவர் கைது
மோட்டார் சைக்கிளை திருடியவர் கைது செய்யப்பட்டார்.
ஆந்திர மாநிலம் சித்தப்பாறை பகுதியை சேர்ந்தவர் தனசேகரன் (வயது 42). இவர் தனியார் மருத்துமனையில் சிகிச்சை பெறுவதற்காக மோட்டார் சைக்கிளில் நேற்று காலை வேலூருக்கு வந்தார். வேலூர் புதிய பஸ்நிலையம் அருகே பாலாற்றங்கரையோரம் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு கழிப்பறைக்கு சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மர்மநபர் திடீரென அந்த மோட்டார் சைக்கிளை திருடி சென்று விட்டார்.
இதுகுறித்து தனசேகரன் வேலூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் சேண்பாக்கம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த நபரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில், அவர் திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை அடுத்த ஆதமங்கலம் கிராமத்தை சேர்ந்த பழனி (53) என்பதும், தனசேகரன் மோட்டார் சைக்கிள் மற்றும் வேலூர் பழைய பஸ்நிலையம், சாரதிமாளிகை உள்பட பல்வேறு இடங்களில் நிறுத்தியிருந்த 5 மோட்டார் சைக்கிள்களை திருடி சேண்பாக்கம் பாலாற்றங்கரையோரம் உள்ள பாழடைந்த ஷெட்டில் பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து பழனியை போலீசார் கைது செய்தனர். அவர் பதுக்கி வைத்திருந்த 6 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.