முண்டியம்பாக்கம்அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் விடுதியில் செல்போன்கள் திருடியவர் கைது

முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் விடுதியில் செல்போன்கள் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-07-05 18:45 GMT

விக்கிரவாண்டி, 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் காத்தமுத்து ஆகியோர் தலைமையிலான போலீசார் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சுங்கச்சாவடி பகுதியில் கை பையுடன் நின்ற வாலிபர் ஒருவர் போலீசாரை பார்த்ததும், அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், அந்த வாலிபரை விரட்டிச் சென்று மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதுடன், கையில் இருந்த பையை சோதனையிட்டனர். அந்த பையில் 9 செல்போன்கள் இருந்தது கண்டறியப்பட்டது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர் சென்னை திருவல்லிக்கேணி பழனியம்மன்கோவில் தெருவை சேர்ந்த கன்னியப்பன் மகன் மேகநாதன்(வயது 34) என்பதும், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் விடுதிக்குள் புகுந்து, மாணவர்கள் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போன்களை திருடி எடுத்து வந்தபோது போலீசிடம் சிக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், மேகநாதனை கைது செய்ததுடன், அவரிடம் இருந்த 9 செல்போன்கள் மீட்கப்பட்டது. கைதான மேகநாதன் மீது சென்னை நகர போலீஸ் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். அரசு மாணவர் விடுதியில் செல்போன்களை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்