கல்லூரி மாணவரிடம் மோட்டார் சைக்கிளை பறித்தவர் கைது

ராமநாதபுரம் அருகே கல்லூரி மாணவரிடம் மோட்டார் சைக்கிளை பறித்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-03-09 18:45 GMT

ராமநாதபுரம் அருகே கல்லூரி மாணவரிடம் மோட்டார் சைக்கிளை பறித்தவர் கைது செய்யப்பட்டார்.

நகை பறிப்பு

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள துத்திவலசை பகுதியை சேர்ந்தவர் பாலசிங்கம் என்பவரின் மகன் அருண்மொழிவானன் (வயது 27). இவர் ராமநாதபுரம் புதிய பஸ்நிலையம் அருகில் உள்ள செல்போன் கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் பணி முடிந்து வீட்டிற்கு செல்லும் வழியில் ரெகுநாதபுரம் பெட்ரோல் பங்க் அருகில் தனது நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் அருண்மொழிவானனை தாக்கி அவர் பேசி கொண்டிருந்த செல்போனை பறித்துக்கொண்டதோடு அவர் கழுத்தில் அணிந்திருந்த 1½ பவுன் தங்க சங்கிலியையும் பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து அருண்மொழிவானன் அளித்த புகாரின் அடிப்படையில் திருப்புல்லாணி போலீசார் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் மேற்கண்ட சம்பவத்தில் ஈடுபட்டது ராமநாதபுரம் அருகே உள்ள வாலாந்தரவை அண்ணாநகர் மலைக்கண்ணன் மகன் மாந்தா மகேந்திரன் (32), தெற்கு காட்டூர் ரெவின்யூ வலசை பகுதியை சேர்ந்த கணேசன் மகன் பிரகாஷ் (28) என்பது தெரிந்தது. இதனை தொடர்ந்து இவர்கள் 2 பேரையும் போலீசார் தேடிவந்தனர்.

மோட்டார் சைக்கிள் பறிப்பு

ராமநாதபுரம் அருகே உள்ள வாலாந்தரவை உடைச்சியார்வலசை வடக்குத்தெரு பகுதியை சேர்ந்தவர் முத்தையா மகன் மோகன்ராஜ் (19). இவர் ராமநாதபுரம் அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ ஆங்கில இலக்கியம் படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு ராமநாதபுரம் தெற்குவாணிவீதி ரெயில்வே கேட் அருகில் நண்பர்களுடன் நின்று பேசிக்கொண்டிருந்தார்.

சிறிது நேரத்தில் நண்பர்கள் அனைவரும் சென்றுவிட்ட நிலையில் மோகன்ராஜ் தனது வாகனத்தை எடுத்து கொண்டு கிளம்ப தயாரானார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் மோகன்ராஜை அவதூறாக பேசி மிரட்டியுள்ளார். அவரின் நடவடிக்கையை கண்டு மிரண்ட மோகன்ராஜ் வாகனத்தை போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவர் சென்றதும் மர்ம நபர் மோகன்ராஜின் மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு சென்று விட்டார். சிறிதுநேரத்தில் நண்பர்களுடன் அங்கு வந்த மோகன்ராஜ் தனது வாகனத்தை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் மோகன்ராஜிடம் வாகனத்தை பறித்து சென்றது திருப்புல்லாணி பகுதியில் செயின், செல்போன் பறித்து சென்றவர்களில் ஒருவரான ரெவின்யூ வலசையை சேர்ந்த கணேசன் மகன் பிரகாஷ் என்பது தெரிந்தது. இந்நிலையில் மேற்கண்ட பிரகாஷ் வாலாந்தரவை அருகில் மதுபோதையில் வாகனத்துடன் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலீசார் அங்கு சென்று பிரகாசை அவர் திருடி வைத்திருந்த மோட்டார் சைக்கிளுடன் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்