தையூர் ஊராட்சியில் பெண் வி.ஏ.ஓ.வை அலுவலகத்திற்குள் வைத்து பூட்டியவர் கைது

தையூர் ஊராட்சியில் பெண் வி.ஏ.ஓ.வை அலுவலகத்திற்குள் வைத்து பூட்டியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-06-08 08:39 GMT

முறைகேடாக பட்டா

கேளம்பாக்கத்தை அடுத்துள்ள தையூர் கிராமத்தில் கோமான் நகர் செல்லும் சாலையில் அரசுக்கு சொந்தமான 11 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்திற்கு தனி நபர்கள் சிலர் கூட்டு சேர்ந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முறைகேடாக ஆவணம் தயாரித்து பட்டா பெற்றதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தையூர் கிராம மக்கள் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். இதையடுத்து வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி முறைகேடாக வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்தனர்.இந்த நிலையில் இந்த நிலத்திற்கு மீண்டும் பட்டா கேட்டு மனு செய்து பட்டா பெற முயற்சிப்பது தெரிய வந்தது.

நடவடிக்கைகள் என்ன?

கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பொக்லைன் எந்திரம் மூலம் நிலத்தை சமன்படுத்தி சீரமைக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து கடந்த 4-ந்தேதி தையூர் கோமான்நகர் பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தின் முன்பு ஒன்று கூடி கோஷமிட்டனர்.நேற்று காலை தையூர் கிராமத்தை சேர்ந்த சதீஷ்குமார் (43) தையூர் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்றார். அங்க இருந்த பெண் வி.ஏ.ஓ. செண்பக வள்ளியிடம் சென்று ஆக்கிரமிப்பு நிலம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்று கேள்வி எழுப்பினார்.

இது குறித்து தாசில்தார் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை அளித்திருப்பதாகவும், அரசு நிலத்தை யாரும் ஆக்கிரமிக்க விட மாட்டோம் என்று வி.ஏ.ஓ. செண்பகவள்ளி கூறினார்.இந்த பதிலால் திருப்தி அடையாத சதீஷ்குமார் உடனே வெளியே சென்று வி.ஏ.ஓ. அலுவலகத்தை பூட்டி இரும்பு சங்கிலியால் கட்டினார். இதனால் அதிர்ச்சி அடைந்த வி.ஏ.ஓ. செண்பகவள்ளி இது குறித்து கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் அங்கு சென்று பூட்டை உடைத்து வி.ஏ.ஓ.வை மீட்டனர்.

இதையடுத்து வி.ஏ.ஓ. செண்பகவள்ளி கேளம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். தன்னை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர் அதில் குறிப்பிட்டு இருந்தார்.. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்