மதுக்கடைக்குள் புகுந்து விற்பனையாளரை கத்தியால் குத்தியவர் கைது

ராமநாதபுரம் அருகே மதுக்கடைக்குள் புகுந்து விற்பனையாளரை கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-05-22 18:43 GMT

ராமநாதபுரம், 

ராமநாதபுரத்தை அடுத்துள்ள சத்திரக்குடி சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் என்பவரின் மகன் கண்ணன் (வயது 47). இவர் ராமநாதபுரம் கிழக்கு கடற்கரைச் சாலை பகுதியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு அருகிலுள்ள மதுக்கடையில் சேல்ஸ்மேனாக பணியாற்றி வருகிறார். இவரின் கடைக்கு நேற்று முன்தினம் திருப்புல்லாணி அருகே உள்ள திணைகுளம் பகுதியைச் சேர்ந்த கதிரேசன் என்ற சுரேஷ் (39) என்பவர் வந்து ரூ.5ஆயிரம் கொடுத்து மதுபாட்டில் கேட்டுள்ளார். கண்ணன் மது பாட்டில் கொடுத்து அனுப்பிய சிறிது நேரத்தில் திரும்பி வந்த கதிரேசன் தான் ரூ.6 ஆயிரம் கொடுத்ததாகவும் மீதி ரூ.1000 பணத்தை தருமாறு கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கண்டித்து அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில் நேற்று பிற்பகலில் கண்ணன் மதுக்கடையை திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கதிரேசன் என்ற சுரேஷ் கடைக்குள் அத்துமீறி நுழைந்து கண்ணனை சரமாரியாக தாக்கியதோடு இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்தி கீழே தள்ளிவிட்டு உள்ளார். கண்ணன் கத்தி கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்துள்ளனர். இதனை தொடர்ந்து கதிரேசன் என்ற சுரேஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாராம். படுகாயம் அடைந்த கண்ணன் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து கதிரேசன் என்ற சுரேசை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்