பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியவர் கைது

பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-05-26 19:50 GMT

விபசாரம்

திருச்சி தென்னூர் பட்டாபிராமன் சாலை பகுதியில் ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விபசார தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் பகல் அந்த பகுதிக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது ஒரு வீட்டில் திருச்சி கீழப்புதூர்ரோட்டை சேர்ந்த மனோகாளிதாஸ்(வயது 28) என்பவர், 2 பெண்களை வைத்து விபசாரம் நடத்தியது தெரியவந்தது.

அந்த பெண்களை மீட்ட போலீசார் அவர்களை காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து மனோ காளிதாஸை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 2 செல்போன்கள், ரூ.6 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

2 சிறுவர்கள் கைது

திருச்சி கருமண்டபம் ஜே.ஆர்.எஸ்.நகரை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 48). இவர் அதேபகுதியில் ஸ்வீட் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் காலை மத்திய பஸ் நிலைய டவுன்பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்தபோது, அங்கு வந்த 2 சிறுவர்கள் அவரது சட்டை பையில் இருந்து ரூ.300-ஐ திருடி கொண்டு தப்பி ஓட முயன்றனர். அருகில் இருந்தவர்கள் உதவியுடன் உடனே அவர்களை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இது குறித்து கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, 2 சிறுவர்களையும் கைது செய்தனர்.

*மணிகண்டம் அருகே உள்ள கொழுக்கட்டைகுடி கிராமத்தை சேர்ந்தவர் ராசு. இவரது மகள் கீதா(21). இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதத்திற்கு முன்பு திருப்பூரில் இருந்து சொந்த ஊருக்கு வந்த கீதா, அவரது வீட்டிலேயே தங்கி இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் கீதாவை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால், இது குறித்து மணிகண்டம் போலீசில் ராசு புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜஸ்டின் திரவியராஜ் வழக்குப்பதிவு செய்து கீதாவை யாராவது கடத்தி சென்றனரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி தேடி வருகிறார்.

*பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 48). இவர் நேற்று முன்தினம் காலை அரியமங்கலம் எஸ்.ஐ.டி.யில் இருந்து மேலகல்கண்டார் கோட்டை செல்லும் சாலையில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக சென்ற வாகனம் ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்த ஜெயபிரகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்