கொத்தனாரை கத்தியால் வெட்டியவர் கைது
ராமநத்தத்தில் கொத்தனாரை கத்தியால் வெட்டியவர் கைது செய்யப்பட்டார்.
ராமநத்தம்,
பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை பகுதியை சேர்ந்தவர் ராமதாஸ்(வயது 59). கொத்தனாரான இவர் நேற்று கடலூர் மாவட்டம் ராமநத்தம்-ஆத்தூர் சாலையோரம் உள்ள ஒரு தள்ளுவண்டி கடையில் இளநீர் குடித்து விட்டு கடை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராமநத்தத்தை சேர்ந்த சுரேஷ் (39) என்பவர் இளநீரை எடுத்து கத்தியால் வெட்டினார். இதைப்பார்த்த ராமதாஸ் ஓரமாக போய் இளநீரை வெட்டு என ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ், ராமதாசை கத்தியால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் ராமதாசை மீட்டு திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்த புகாரின்பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிந்து சுரேசை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.