கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடியவர் கைது
கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடியவர் கைது செய்யப்பட்டார்.
சிவகாசி,
சிவகாசி அருகே உள்ள வடமலாபுரம் ஸ்ரீநாரணம்மாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள உண்டியல் ஆண்டுக்கு ஒரு முறை திறக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 5-ந்தேதி அதிகாலை கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்து பணத்தை மர்ம ஆசாமி திருடி சென்றது தெரிய வந்தது. இதை தொடர்ந்து கோவில்பூசாரி ராமமூர்த்தி இதுகுறித்து திருத்தங்கல் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் கோவிலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த போது அதில் வடமலாபுரம் அண்ணாகாலனியை சேர்ந்த கருப்பையா என்பவரின் மகன் காசிமாயன் என்கிற சேட்டையன் (வயது 24) என்பவர் கோவிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றது பதிவாகி இருந்தது.
பின்னர் அவரை போலீசார் பல்வேறு இடங்களில் தேடினர். அதே பகுதியில் உள்ள ஒரு மதுக்கடையில் இருந்த போது அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடம் கோவில் உண்டியலை உடைத்து எடுக்கப்பட்ட பணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.