ஒரே பாரதம் என்ற முழக்கத்தை நனவாக்குவதே காசி தமிழ் சங்கமத்தின் தலையாய நோக்கம் -நிர்மலா சீதாராமன்

ஒரே பாரதம் என்ற முழக்கத்தை நனவாக்குவதே காசி தமிழ் சங்கமத்தின் தலையாய நோக்கம் என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேசினார்.

Update: 2022-12-05 00:02 GMT

சென்னை,

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்று வரும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில், நேற்று கோவில்களின் கட்டிடக்கலை குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் தலைமை விருந்தினராக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு பேசியதாவது:-

தலையாய நோக்கம்

தமிழ் மொழியின் பெருமையை நன்கு உணர்ந்துள்ள பிரதமர் நரேந்திரமோடி, உன்னதமான தமிழ் மொழியை கவுரவிக்கும் வகையில், உலக அரங்குகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும், திருக்குறள், சங்க தமிழ் இலக்கியங்களில் இருந்து மேற்கோள் காட்டி பேசிவருகிறார்.

காசிக்கும், தமிழகத்துக்கும் இடையேயான புராதனமான தொடர்பை எடுத்துக்கூறி, ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற பிரதமரின் முழக்கத்தை நனவாக்குவதே காசி தமிழ் சங்கமத்தின் தலையாய நோக்கம்.

கடுமையாக எதிர்க்க வேண்டும்

நாம் ஒவ்வொருவரும் ஒரு மொழி பேசலாம். வீடுகளில் பின்பற்றப்படும் பண்பாடு வேறுவேறாக இருக்கலாம். இருந்தாலும் நாம் அனைவரும் பாரதத்தாயின் மக்களே. அதனால்தான் நமது பிரதமர் ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற சொற்றொடரை முன்வைத்தார்.

ஆனால், நம்மை பிரிப்பதற்காக கூறப்படும் வேறுபாடுகள் இடைக்காலங்களில் கையாளப்படும் உத்தியே தவிர, அதில் உண்மை இல்லை. இதை இன்றும் அரசியலில் சிலர் கூறிவருவதை நாம் கடுமையாக எதிர்க்க வேண்டும் என்ற நிலை இருந்தாலும், எதிர்ப்பு தெரிவிக்கா விட்டாலும், சரியான உண்மைகளை ஆதாரங்களுடன் எடுத்துச்சொல்ல வேண்டிய கடமை நமக்கு உண்டு. அதனால்தான் காசி தமிழ் சங்கமம் போன்ற கூட்டங்களில், காசிக்கும், தமிழகத்துக்கும் இடையே தொடர்பு இருப்பதை நாம் எடுத்து சொல்கிறோம்.

காஞ்சியும்.. காசியும்..

நீண்ட காலமாக, இசை மூலமாக எப்படி தொடர்புகளை வளர்த்தார்கள் என்பதை காசியில் நடப்பதுதான் காஞ்சியில் நடக்கிறது என்று காணும்போது உணர முடிகிறது. 2 உயர்ந்த கல்வி மையங்களாக காஞ்சியும், காசியும் இருந்துள்ளன.

காசியில் இன்றும் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. படிப்பது மட்டுமல்லாமல், கலைகள் வளர்க்கப்படுகின்றன. குமரகுருபரர் இங்கு வந்து கோவிலை கட்டிவிட்டு, அதற்குப்பின்னர் அங்கு சென்று தருமபுரம் ஆதீனத்தை நிறுவினார். காதில் கேட்டதை, அங்கும் பகிர வேண்டும் என்ற எண்ணம்தான் அதற்கு காரணம். ஞானம் என்பது பகிரப்பகிர அதிகமாகும். காதால் கேட்டதை நமக்குள்ளேயே அறிந்து கொண்டதன் மூலம், தமிழில் பல கவிதைகள் உருவாகின.

இந்தி திணிப்பு

இன்றைக்கு, சிலர் இந்தி திணிப்பு என விதண்டாவாதம் பேசுகின்றனர்.

அரசியல் காரணங்களுக்காக நமது பழம்பெரும் கலாசாரத்தை மறந்து விடுவதா, அல்லது அதை ஒரு பக்கம் ஒதுக்கிவைத்து விடுவதா என பார்க்கும்போது, இந்த தமிழ் சங்கமத்தின் முக்கியத்துவம் நமக்கு புரியும்.

ஒற்றுமையாக இருந்தால் ஏழ்மை அகலும்

நீங்கள் அனைவரும் தமிழ்நாட்டில் இருந்து இங்குவந்து, காசியில் தமிழ் மக்களை எவ்வாறு வரவேற்கிறார்கள் எத்தனையோ ஆண்டுகளாக இங்கு இருப்பவர்கள் தமிழுக்கும், தமிழ் பண்பாட்டுக்கும் ஆற்றும் தொண்டு என்ன என்பதை புரிந்துகொண்டு, நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக, நாம் அனைவரும் ஒன்றாக இருந்தால்தான் இந்த நாடு முன்னேறும், ஏழ்மை தானாக அகலும் என்ற நமது பிரதமரின் கனவை நனவாக்க பாடுபடுவதுடன், உண்மைகளை அவர்கள் முன்பு எடுத்து வைக்கவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்