நூலக கட்டிடம் முற்றிலும் இடிந்தது

கூடலூரில் தொடர் கனமழையால் நூலக கட்டிடம் முற்றிலும் இடிந்து விழுந்தது. தொடர்ந்து அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Update: 2022-08-10 13:42 GMT

கூடலூர், 

கூடலூரில் தொடர் கனமழையால் நூலக கட்டிடம் முற்றிலும் இடிந்து விழுந்தது. தொடர்ந்து அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தொடர் கனமழை

கூடலூர் பகுதியில் கடந்த 10 நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் கூடலூர் தாலுகா முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே கனமழைக்கு கடந்த 8-ந் தேதி மாலை 5 மணிக்கு கூடலூர் நூலக கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

இடிபாடுகளுக்கு இடையே 90 ஆயிரம் புத்தகங்கள் சிக்கியது. இதைத் தொடர்ந்து இடிந்த பாகங்களை அகற்றும் பணி நடைபெற்றது. பின்னர் கொட்டும் மழையில் சேதத்துடன் புத்தகங்கள் மீட்கப்பட்டது. கட்டிடத்தில் புத்தகங்கள் வைக்கும் பகுதி மட்டும் இடிந்து விழுந்தது. ஆனால், அதே கட்டிடத்தில் வரவேற்பு வரை எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருந்தது.

வரவேற்பு அறை இடிந்தது

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கனமழை கொட்டி தீர்த்தது. அப்போது நள்ளிரவில் நூலக கட்டிடத்தின் வரவேற்பு அறையும் இடிந்து விழுந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அலுவலக கோப்புகள் மற்றும் கணினிகள் உள்ளிட்ட அனைத்து பதிவேடுகள் வேறு அறைக்கு மாற்றப்பட்டு இருந்தது. இதனால் பெரிய அளவில் பொருட்கள் பாதிப்பு ஏற்படவில்லை. இருப்பினும் நூலக கட்டிடம் முற்றிலும் தரைமட்டமானது.

தகவல் அறிந்த மாவட்ட நூலக அலுவலர் யுவராஜ், தலைமை எழுத்தர் ராபர்ட் ஜான், முதல் நிலை நூலகர் ரவி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து புதிய கட்டிடம் கட்டும் வரை நூலகத்துக்கு சொந்தமான 90 ஆயிரம் புத்தகங்களை தற்காலிகமாக வேறு இடத்துக்கு மாற்ற உத்தரவிட்டனர். இதுகுறித்து மாவட்ட நூலக அலுவலர் யுவராஜ் கூறும்போது, தொடர் மழையால் பழமையான கட்டிடம் இடிந்து விட்டது. இதனால் புத்தகங்களை பாதுகாப்பாக வைப்பதற்கு அரசு பள்ளிக்கூடம் அல்லது தனியார் கட்டிடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்