நூலக கட்டிடம் இடிந்து விழும் அபாயம்

கூடலூரில் கிளை நூலக கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. இதனால் புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாசகர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Update: 2022-08-07 13:31 GMT

கூடலூர், 

கூடலூரில் கிளை நூலக கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. இதனால் புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாசகர்கள் கோரிக்கை விடுத்தனர்.

நூலக கட்டிடம்

கூடலூர்-ஊட்டி நெடுஞ்சாலையில் கிளை நூலகம் உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான வாசகர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். பள்ளிக்கூட மாணவ-மாணவிகள், அரசு ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் செய்தித்தாள்கள், புத்தகங்கள் வாசித்து செல்கின்றனர். கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு நூலக கட்டிடம் கட்டப்பட்டது.

தொடர்ந்து வாசகர்கள் அமர்ந்து படிக்கும் கட்டிடமும் தனியாக கட்டப்பட்டது. இந்தநிலையில் கூடலூரில் தொடர் மழை பெய்தாலும், அதற்கு ஏற்ப கட்டிடம் பராமரிக்கப்படுவது இல்லை. இதனால் நூலக கட்டிடம் பலம் இழந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது.

வாசகர்கள் அச்சம்

இதனால் நூலகத்துக்கு வரும் வாசகர்கள் அச்சத்துடன் அமர்ந்து படித்து செல்கின்றனர். தொடர்ந்து கட்டிடத்தின் மேற்கூரைகள் வழியாக மழைநீர் வழிந்தோடுவதால் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இது தவிர புத்தகங்கள் வைக்கப்பட்டு உள்ள அறை கட்டிடம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. கட்டிட விரிசல்களுக்கு இடையில் மழைநீர் வழிவதால் புத்தகங்கள் நனைந்து வருகின்றன.

இதனால் பிளாஸ்டிக் விரிப்புகள் கொண்டு பல இடங்களில் புத்தகங்கள் மறைக்கப்பட்டு உள்ளது. இதேபோல் கட்டிடத்தின் சுவர்களும் பல இடங்களில் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன்பாக இடியும் நிலையில் உள்ள கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக கட்ட வேண்டும் என வாசகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

நனையும் புத்தகங்கள்

இது குறித்து வாசகர்கள் கூறியதாவது:-

இலக்கியம், அறிவியல் உள்பட அனைத்து வகையான புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் உள்ள நிலையில், மிகவும் மோசமான கட்டிடத்தில் இருப்பதால் மழையில் நனைந்து வீணாகி வருகிறது. இதனால் காலத்துக்கு ஏற்ப புதிய கட்டிடம் கட்ட வேண்டுமென வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நவீன தொலைத்தொடர்பு சாதனங்களின் வளர்ச்சி பரிணாமத்தில் வாசிக்கும் திறன் குறைந்து வருவதை தடுக்க, டிஜிட்டல் நூலகமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்