வனத்துறைக்கு வழங்கிய நிலத்தை மறு அளவீடு செய்து பட்டா வழங்க வேண்டும்

ஓவேலி பேரூராட்சியில் வனத்துறைக்கு வழங்கப்பட்ட நிலங்களை மறு அளவீடு செய்து, விவசாயிகளின் நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என முதல்-அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டு உள்ளது.

Update: 2023-03-14 18:45 GMT

கூடலூர், 

ஓவேலி பேரூராட்சியில் வனத்துறைக்கு வழங்கப்பட்ட நிலங்களை மறு அளவீடு செய்து, விவசாயிகளின் நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என முதல்-அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டு உள்ளது.

மக்கள் போராட்டம்

கூடலூர் அருகே ஓவேலி பேரூராட்சி காந்திநகர் மக்கள், விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-

ஓவேலி பேரூராட்சி பகுதியில் 25 ஆயிரம் ஏக்கர் ஜமீன் ஒழிப்பு அரசு நிலங்கள் பிரிவு 17-ன் கீழ் உள்ளது. இந்த நிலங்களில் பழங்குடியின மக்கள், தாயகம் திரும்பியோர், மலையாளம் மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் உள்பட 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காலம், காலமாக தங்கள் அனுபவத்தில் விவசாயம் செய்து வீடுகள் கட்டி வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலங்களில் வருவாய்த்துறை சார்பில் 11,250 ஏக்கர் நிலம் பிரிவு 53-ன் கீழ் வனநிலமாக வகைப்படுத்தி வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர், இந்த நிலத்தின் வகை 16 ஏ என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட பகுதியில் மக்கள் குடியிருப்புகளும் விவசாய நிலங்களும் உள்ளடங்குகிறது. இந்த நிலங்கள் முறையாக கள அளவீடு செய்து வனத்துறைக்கு ஒப்படைக்கப் படவில்லை. இதனால் அந்த பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

வனத்துறை நிலங்கள்

மூன்று தலைமுறைக்கும் மேலாக இப்பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்கள் வீட்டு மனைப்பட்டா, நிலப்பட்டா, மின்இணைப்பு வழங்கக் கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த மாதம் மாதம் 17-ந் தேதி வனத்துறையினர் காந்திநகர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே கண்காணிப்பு முகாம் அமைக்கும் பணிகளை துவங்கிய போது அங்கு திரண்ட பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பணிகள் தடைப்பட்டு உள்ளது.

இதேபோல் பல இடங்களிலும் வனத்துறையின் கண்காணிப்பு முகாம் அமைக்கும் பணிகளுக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. நிலங்கள் முழுமையாக வரையறை செய்யப்படாத நிலையில் பொதுமக்கள் வசிக்கும் இடங்கள் வனத்துறை நிலங்களுக்குள் வருவதால் மக்கள் குழப்பமான சூழ்நிலையில் உள்ளனர்.

அரசு நடவடிக்கை

எனவே, மக்கள் வசிக்கும் பகுதிகளை ஒதுக்கி வனநிலத்தை மறு அளவீடு செய்து அதை மக்களுக்கு தெளிவுபடுத்தவும், ஏழை எளிய மக்கள் பாதிக்காத வகையிலும் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. தமிழக முதல்-அமைச்சர், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் கவனத்திற்கும் கொண்டு செல்லும் வகையில் கூடலூர் சட்டமன்ற உறுப்பினர், வருவாய், வனம், மறுவாழ்வு, மனித உரிமை ஆணையம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட துறை அமைச்சர்கள் மற்றும் உயர் அலுவலர்களுக்கு இந்த மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்