ஏரி குளம் பாசன வாய்க்கால்களை தூர்வாரி சீரமைக்க வேண்டும்

மழைக்காலம் தொடங்குவதற்குள் ஏரி, குளங்கள், பாசன வாய்க்கால்களை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்று குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்

Update: 2022-06-29 17:07 GMT

விழுப்புரம்

விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்

விழுப்புரம் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நேற்று விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். தாசில்தார்கள் விழுப்புரம் ஆனந்தகுமார், விக்கிரவாண்டி இளவரசன், திருவெண்ணெய்நல்லூர் பாஸ்கரதாஸ், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார்கள் ஜெயலட்சுமி, கணேசன், குடிமைப்பொருள் தனி தாசில்தார் இளங்கோவன், கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் வெங்கடசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர், திருவெண்ணெய்நல்லூர், கண்டாச்சிபுரம் ஆகிய தாலுகாக்களை சேர்ந்த விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள், தங்களது கோரிக்கைகள் குறித்து பேசியதாவது:-

பூச்சி மருந்து கடைகளில் ஆய்வு

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் உரம், பூச்சி மருந்து, விதைகள் ஆகியவற்றை போதிய அளவில் இருப்பு வைத்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டும், விவசாயிகளுக்கு அதனை முறையாக வழங்குவதில்லை. இதை பார்க்கும்போது இதில் அரசியல் குறுக்கீடு இருக்கிறதோ? என்று எங்களுக்கு சந்தேகமாக உள்ளது. ஆகவே இருப்பு விவரத்தை தெரியப்படுத்தினால்தான் எங்களுக்கு தெரியும்.

விழுப்புரம் கோட்டத்தில் உள்ள அனைத்து பூச்சி மருந்து விற்பனை கடைகளிலும் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். அனுமதிக்கப்படாத பூச்சி மருந்துகளை வைத்து விற்பதால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. வாங்கக்கூடிய பூச்சி மருந்துகளுக்கு சரியாக ரசீது போடுவதில்லை. ஜி.எஸ்.டி. ரசீதும் வழங்குவதில்லை. சில சமயங்களில் போலியான ரசீதும் வழங்குகின்றனர். அதுமட்டுமின்றி ஒரு சில பூச்சி மருந்து விற்பனை கடைகளில் விவசாயிகள் அமர இருக்கை வசதி இல்லை. அங்கு மனித உரிமை மீறப்படுகிறது.

தூர்வாரி சீரமைக்க வேண்டும்

ஏரிகள், குளங்கள், பாசன வாய்க்கால்கள் எதையுமே சீர்செய்யவில்லை. மழைக்காலம் தொடங்குவதற்குள் ஏரி, குளங்களை தூர்வாரி சீரமைக்க வேண்டும். அதுபோல் நீர்வரத்து வாய்க்கால், போக்கு வாய்க்கால் ஆகியவற்றை தூர்வாரினாலே பயிர் சேதம் இருக்காது. ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் குடிநீர், கழிவறை வசதி இல்லை. அவற்றை உடனடியாக செய்துதர வேண்டும். விழுப்புரம்- நாகப்பட்டினம் இடையே 4 வழிச்சாலை பணிக்காக அற்பிசம்பாளையம் கிராமத்தில் நிலம் கையகப்படுத்தியதற்கு சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு இன்னும் உரிய இழப்பீடு கிடைக்கப்பெறவில்லை. அந்த இழப்பீட்டு தொகையை பெற்றுத்தர வேண்டும். கண்டமங்கலம் வட்டாரத்தில் அட்மா திட்டம் பற்றி விவசாயிகளுக்கு சரியான விவரங்களை தெரிவிப்பதில்லை. விக்கிரவாண்டி தாலுகாவில் பட்டா மாற்றம் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு உடனுக்குடன் பட்டா மாற்றம் செய்து தராமல் அதிகாரிகள் அலைக்கழிப்பு செய்கின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர். இதை கேட்டறிந்த கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு விரைவில் தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்