50 ஆண்டுகளுக்கு பிறகு அச்சமங்கலம் பெரிய ஏரி நிரம்பியது
பர்கூர் அருகே 50 ஆண்டுகளுக்கு பிறகு அச்சமங்கலம் பெரிய ஏரி நிரம்பியதால் பொதுமக்கள் ஆடு வெட்டி சிறப்பு பூஜை செய்தனர்.
பர்கூர்:
பர்கூர் அருகே உள்ள அச்சமங்கலம் பெரிய ஏரி சுமார் 120 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த, ஏரியின் நீர் வழிப்பாதைகள் தூர்வாரப்படாமலும், புதர்கள் மண்டியும் இருந்தது. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க., செயலாளரும், பர்கூர் எம்.எல்.ஏ. வுமான மதியழகன் தன் சொந்த நிதியில் இருந்து, 2 லட்ச ரூபாய் செலவு செய்து நீர்வழி பாதைகளை தூர்வார நடவடிக்கை மேற்கொண்டார். இதனால் அச்சமங்கலம் பெரிய ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. தற்போது பெய்து வரும் தொடர் மழையால், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பெரும்பாலான, ஏரிகள், குளம், குட்டைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் அச்சமங்கலம் பெரிய ஏரி, 50 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நிரம்பியது.
இதையடுத்து மதியழகன் எம்.எல்.ஏ. ஏரியில் மலர் தூவி, விவசாயிகளுக்கு இனிப்புகள் வழங்கினார். ஏரி நிரம்பியதை அடுத்து அப்பகுதி பொதுமக்கள் ஆடு வெட்டி சிறப்பு பூஜை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் நாகராஜ், துணை செயலாளர் கோவிந்தசாமி, ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், அறிஞர், தலைமை செயற்குழு உறுப்பினர் கிருபாகரன், பர்கூர் பேரூராட்சி தலைவர் சந்தோஷ்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.