வாகன நிறுத்தமாக மாறிய கிரிவீதிகள்
பழனியில் வாகன நிறுத்தமாக கிரிவீதிகள் மாறியதால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா என வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். வாரவிடுமுறை, விசேஷ நாட்களில் கார், பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் ஆயிரக்கணக்கானோர் வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்கின்றனர். பழனிக்கு வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு கிழக்கு, மேற்கு கிரிவீதியில் சுற்றுலா பஸ்நிலையம் உள்ளது. இங்கு கட்டணம் ஏதுமின்றி கார், பஸ், வேன் உள்ளிட்டவற்றை பக்தர்கள் நிறுத்துகின்றனர். ஆனால் ஏராளமான பக்தர்கள் தங்களது வாகனங்களை கிரிவீதிகளில் நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் பழனி கிரிவீதிகள் தற்போது வாகன நிறுத்தமாக மாறியுள்ளது.
கிரிவீதிகளின் சாலையோரத்தில் கார், வேன்களை நிறுத்துவதால் வாரவிடுமுறை, விசேஷ நாட்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பழனி மலையை சுற்றி கிரிவலம் வரும் பக்தர்கள் கடும் சிரமம் அடைகின்றனர். மேலும் அலகு குத்தி, காவடி எடுத்து ஆடி வரும் பக்தர்களுக்கு இடையூறாக உள்ளது. பழனி கிரிவீதிகளில் வாகனங்களை நிறுத்தக்கூடாது என அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. ஆனால் அதை பொருட்படுத்தாமல் பக்தர்கள் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். எனவே கிரிவீதிகளில் வாகனங்களை நிறுத்துவதை தடுக்க கோவில் நிர்வாகம் மற்றும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.