தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் சகோதரர்கள் 2 பேருக்கு இரட்டை ஆயுள்
தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் சகோதரர்கள் 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கரூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சொத்து தகராறு
கரூர் அருகே உள்ள ராயனூர் தில்லை நகரை சேர்ந்தவர் ரெங்கநாதன் (வயது 37). ஏ.சி. மெக்கானிக். இவரது மனைவி தீபிகா (29). இவர்களது மகள் அக்சயா (4). ரெங்கநாதன் குடும்பத்துடன் வெள்ளியணை அருகே உள்ள மணவாடி அய்யம்பாளையத்தில் வசித்து வந்தார். ரெங்கநாதனின் சித்தி மகன்கள் பார்த்திபன் (29), கவுதம் என்கிற விக்னேஷ் (28), பிரவீன் (25). இவர்களுக்கு இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் அய்யம்பாளையத்தில் உள்ள ரெங்கநாதன் வீட்டுக்கு கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் 11-ந்தேதி இரவு பார்த்திபன், கவுதம், பிரவீன் ஆகிய 3 பேரும் சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே மீண்டும் சொத்து தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.
தம்பதி கொலை
இதில் ஆத்திரமடைந்த பார்த்திபன், கவுதம், பிரவீன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ரெங்கநாதன்-தீபிகாவை அரிவாளால் ெவட்டினர். இதில் படுகாயம் அடைந்த ரெங்கநாதன்- தீபிகா இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பின்னர் பார்த்திபன், கவுதம், பிரவீன் ஆகிய 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இந்த கொலை குறித்து வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிந்து, பார்த்திபன், கவுதம், பிரவீன் ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த பிரவீன் தலைமறைவாகி விட்டார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இரட்டை ஆயுள் தண்டனை
இந்நிலையில் விசாரணை முடிந்து இவ்வழக்கில் நீதிபதி சண்முகசுந்தரம் நேற்று தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்பில், பார்த்திபன், கவுதம் ஆகிய இருவருக்கும் தலா இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.22 ஆயிரம் அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.