தினமும் கள ஆய்வு செய்து கள்ளச்சாராயம் ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் கள்ளக்குறிச்சி கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தினமும் கள ஆய்வு செய்து கள்ளச்சாராய ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினருக்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2023-05-17 19:00 GMT

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சட்டம்-ஒழுங்கு, பராமரிப்பு பணிகள், சாலை பாதுகாப்பு மற்றும் போதை பொருள் தடுப்பு குறித்த அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டம் கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் நடைபெற்றது. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர்லால், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், கோட்டாட்சியர்கள் பவித்ரா, யோகஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வருவாய்த் துறை, காவல் துறை, நெடுஞ்சாலை துறை, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுடன் சட்டம் ஒழுங்கு, பராமரிப்பு பணிகள், சாலை பாதுகாப்பு மற்றும் போதை பொருள் தடுப்பு குறித்தும் எடுக்கப்பட நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் கேட்டறிந்தார்.

தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்

பின்னர் அவர் கூறும்போது, கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் கள்ளச்சாராயம் தயாரிப்பு மற்றும் விற்பனையை முழுவதுமாக தடை செய்ய கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளருடன் காவல் துறையினரும் இணைந்து தினமும் குக்கிராமங்கள், மலைப்பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் கள ஆய்வு மேற்கொண்டு கள்ளச்சாராயம் ஒழிப்பு பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார்.

மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சாலை பாதுகாப்புகளை உறுதிபடுத்திட விபத்துகளை குறைத்திடும் பணிகளை நெடுஞ்சாலை துறை மற்றும் காவல் துறையினர் மேற்கொள்ள வேண்டும். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளுடன் முக்கிய சாலைகள் இணையும் பகுதிகளில் கிராம சாலைகள் இணையும் பகுதிகளில் போதிய வேகத்தடைகள் அமைத்து ஒளிரும் விளக்குகள் செயல்பாட்டில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

சாலை விதிகளை மீறுவோர் மீது அபராதம் விதித்து, சாலை பாதுகாப்பு மற்றும் விதிகள் தொடர்பாக வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சட்டம்-ஒழுங்கு, பாதுகாப்பு பணிகள், போதை பொருள் தடுப்பு பணிகளை காவல் துறையினர் சிறப்புடன் மேற்கொள்ள வேண்டும். சாலை பாதுகாப்பு பணிகளை நெடுஞ்சாலை மற்றும் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

கூட்டத்தில் நுகர்வோர் சங்க செயலாளர் அருண்கென்னடி பேசும்போது துருகம் சாலை, காந்தி ரோடு, சேலம் மெயின் ரோடு குறுகிய சாலையாக இருப்பதால் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருவதை தடுக்க வேண்டும் என்றார். இதற்கு பதில் அளித்து பேசிய கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

கூட்டதில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ரமேஷ், மகேஷ், மனோஜ்குமார், உதவி ஆணையர் (கலால்) ராஜவேல், உதவி இயக்குனர்(ஊராட்சிகள்) ரத்தினமாலா, கள்ளக்குறிச்சி மண்டல போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கரன், கலெக்டர் அலுவலக மேலாளர் அனந்தசயனன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்