விசாரணைக்கு சென்றவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரம்: 4 போலீஸ் நிலையங்களில் அதிகாரி அமுதா அதிரடி ஆய்வு

விசாரணைக்கு சென்றவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக 4 போலீஸ் நிலையங்களில் விசாரணை அதிகாரி அமுதா அதிரடி ஆய்வு மேற்கொண்டார். அவருடன் கலெக்டர் கார்த்திகேயனும் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-04-18 19:55 GMT

அம்பை:

நெல்லை மாவட்டம் அம்பை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களின் பற்கள் பிடுங்கப்பட்டதாக எழுந்த புகார்களின் பேரில் அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து விரிவான விசாரணை மேற்கொள்வதற்காக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை முதன்மை செயலாளரான மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதாவை விசாரணை அதிகாரியாக தமிழக அரசு நியமித்தது.

அவர் கடந்த 10-ந் தேதி அம்பை தாலுகா அலுவலகத்தில் தனது விசாரணையை தொடங்கினார். ஆனால், அன்று யாரும் ஆஜராகவில்லை. 2-வது கட்டமாக நேற்று முன்தினம் அவர் விசாரணை நடத்தினார். அப்போது, பாதிக்கப்பட்ட 11 பேர் ஆஜரானாா்கள். இதில் 8 பேரிடம் விசாரணை நடத்தி முடிப்பதற்கு நள்ளிரவு 12.15 மணி வரை ஆகிவிட்டது. இதனால் மற்ற 3 பேரான விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்த வேதநாராயணன், சிவந்திபுரத்தை சேர்ந்த மாரியப்பன், கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த சுபாஷ் ஆகியோரை இன்று (அதாவது நேற்று) ஆஜராகும்படி அனுப்பி வைக்கப்பட்டனர்.

3 பேர் மீண்டும் ஆஜர்

இதையடுத்து நேற்று 2-வது நாளாக காலை 11 மணி அளவில் அம்பை தாலுகா அலுவலகத்திற்கு அதிகாரி அமுதா விசாரணை நடத்துவதற்கு வந்தார்.

அப்போது, வேதநாராயணன், மாரியப்பன், சுபாஷ் ஆகியோர் அதிகாரி அமுதா முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதையொட்டி நேற்றும் போலீசார் யாரும் தாலுகா அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை.

கலெக்டர் திடீர் வருகை

இந்த நிலையில் மதியம் 2 மணி அளவில் நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் திடீரென்று விசாரணை நடக்கும் இடத்திற்கு காரில் வந்தார். அவர், அதிகாரி அமுதாவிடம் சிறிது நேரம் பேசினார்.

பின்னர் 2 பேரும் அம்பை யூனியன் அலுவலகத்திற்கு சென்று அங்கு நடைபெறும் மகளிர் திட்டங்கள் குறித்து கேட்டறிந்தனர். புதிதாக கட்டப்பட்டு வரும் யூனியன் கட்டிடத்தையும் ஆய்வு செய்தனர்.

போலீஸ் நிலையங்களில் ஆய்வு

தொடர்ந்து அதிகாரி அமுதா, கலெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் அம்பை போலீஸ் நிலையத்திற்கு அதிரடியாக சென்றனர். அங்கிருந்த ஒவ்வொரு அறைகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் அம்பை அனைத்து மகளிர் போலீஸ் நிலையம், கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையங்களில் ஆய்வு நடத்தி, அங்குள்ள கண்காணிப்பு கேமரா செயல்பாடுகளை பார்வையிட்டனர். மேலும் விக்கிரமசிங்கபுரம் போலீஸ் நிலையத்திற்கு அதிகாரி அமுதா, கலெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் சென்றனர். போலீஸ் நிலைய கதவை மூடிக்கொண்டு அங்கு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரிடம் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அங்குள்ள கண்காணிப்பு கேமரா, கணினி அறை, கைதிகள் அடைக்கப்படும் சிறை, கைதிகளின் வருகை பதிவேடு ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு நெல்லைக்கு வந்தனர். போலீஸ் நிலையங்களில் அதிகாரிகளின் இந்த அதிரடி ஆய்வால் பரபரப்பு ஏற்பட்டது.

சமூக வலைதளங்களில் வீடியோ

இதற்கிடையே, மக்கள் கண்காணிப்பக நிர்வாக இயக்குனர் ஹென்றி டிபென் அம்பை தாலுகா அலுவலகத்தில் அதிகாரி அமுதாவை நேரில் சந்தித்து பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை தகவல்களை அபிடவிட் மனுவாக தாக்கல் செய்தார். தொடர்ந்து பாதிக்கப்பட்ட நபர்களுடன் சென்று அம்பை போலீஸ் நிலையத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக புகார் அளிப்பதாக தெரிவித்தார்.

பின்னர் பாதிக்கப்பட்டவர்களுடன் மக்கள் கண்காணிப்பக வழக்கறிஞர்கள் அம்பை போலீஸ் நிலையத்திற்கு சென்றனர். அங்கு பற்கள் பிடுங்கப்பட்ட சம்பவம் நடந்த அறைகளை காட்டி அவர்கள் வீடியோ எடுத்து விளக்கினர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்