காலை உணவு சாப்பிடவிடாமல் தடுத்த விவகாரம்: ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கனிமொழி எம்.பி. நேரில் விசாரணை

காலை உணவு சாப்பிடவிடாமல் தடுத்த விவகாரம் தொடர்பாக ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கனிமொழி எம்.பி. நேரில் விசாரணை நடத்தினார்.

Update: 2023-09-13 00:23 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உசிலம்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் காலை உணவு திட்டம் கடந்த 25-ந் தேதி முதல் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் சமையலராக பட்டியலின பெண் ஒருவர் நியமிக்கப்பட்டு, சமையல் செய்து வருகிறார்.

அங்கு படிக்கும் 11 மாணவ-மாணவிகளில் பெரும்பாலான குழந்தைகளை பள்ளியில் வழங்கும் காலை உணவை சாப்பிட வேண்டாம் என்று பெற்றோர்கள் தடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் நேற்று முன்தினம் மாணவர்கள் பலர் கண்ணீர் மல்க காலை உணவு சாப்பிடாமல் தவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அமைச்சர் கீதாஜீவன் மற்றும் அதிகாரிகள் பள்ளிக்கூடத்திற்கு சென்று ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது காலை உணவு திட்ட சமையலரை இடமாற்றம் செய்ய வேண்டும் என பெற்றோர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கனிமொழி எம்.பி. விசாரணை

நேற்று காலையில் கனிமொழி எம்.பி. பள்ளிக்கூடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி விசாரணை மேற்கொண்டார்.

பின்னர் அவர், ஊர் கமிட்டி தலைவர் முத்துவேல்சாமி, மாணவர்களின் பெற்றோர் மற்றும் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, குறைகளை கேட்டு அறிந்தார்.

அப்போது, அவர்கள் கூறுகையில், 'எங்கள் கிராமத்தில் தீண்டாமை என்ற சொல்லுக்கே இடமில்லை. இங்கு அனைத்து சமுதாயத்தினரும் ஒற்றுமையுடன் தான் உள்ளோம். எங்களுக்குள் எந்தவித பாகுபாடும் கிடையாது. இங்கு நடந்தது தனிபட்ட ஒருவரின் பிரச்சினை தான். இதில் சாதி பிரச்சினை என்றும் எதுவும் இல்லை. எங்களது குழந்தைகள் பள்ளியில் வழங்கும் காலை உணவுவை எப்போதும் போல் சாப்பிடுவார்கள். இதை யாரும் தடுக்கமாட்டோம்' என்றனர்.

மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்

பின்னர் கிராம மக்களிடம் கனிமொழி எம்.பி. கூறுகையில், காலை உணவு திட்டம் என்பது மகத்தான ஒரு திட்டம். இது குழந்தைகள் நலன் சம்பந்தப்பட்டது. எனவே, குழந்தைகளுக்கு கிடைக்க கூடிய உணவை யாரும் தடுக்க வேண்டாம் என்றார்.

தொடர்ந்து கனிமொழி எம்.பி. பள்ளிக்கூடத்தில் இருந்த மாணவர்களுடன் கலந்துரையாடி படிப்பு, காலை உணவு உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் மாணவ-மாணவிகளுக்கு உணவு பரிமாறி அவர்களுடன் தரையில் அமர்ந்து சாப்பிட்டார். அப்போது அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்