நாய்களை கொன்ற விவகாரம்
நாய்களை கொன்ற விவகாரத்தில் பஞ்சாயத்து தலைவி, கணவர் மீது வழக்கு பாய்ந்தது.
விருதுநகர் குமாரபுரத்தை சேர்ந்தவர் சுனிதா (வயது 39). பிராணிகள் நல ஆர்வலரான இவருக்கு ஓ.சங்கரலிங்காபுரம் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட நாய்கள் கொல்லப்பட்டதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஓ.சங்கரலிங்காபுரம் பஞ்சாயத்து தலைவி நாகலட்சுமியின் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். பின்னர் சுனிதா, ஆமத்தூர் போலீசில் புகார் செய்தார்.
போனில் பேசிய போது, பஞ்சாயத்து தலைவி நாகலட்சுமியின் கணவர் மீனாட்சிசுந்தரம் நாய்களை கொன்றதாக ஒப்புக்கொண்டார். எனவே நடவடிக்கை எடுக்க வேண்டும், என புகாரில் சுனிதா கூறி இருந்தார். இதுதொடர்பாக ஆமத்தூர் போலீசார் விசாரணை நடத்தி, பஞ்சாயத்து தலைவி நாகலட்சுமி, அவரது கணவர் மீனாட்சிசுந்தரம் உள்ளிட்ட சிலர் மீது பிராணிகள் வதை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.