அரசு நிலங்களை தனியாருக்கு பட்டா போட்ட விவகாரம் - வட்டாட்சியரை கைது செய்த சிபிசிஐடி

அரசு நிலங்களை தனியாருக்கு பட்டா போட்ட விவகாரத்தில் வட்டாட்சியரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-11-16 17:45 GMT

தேனி,

தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் வடவீரநாயக்கன்பட்டி, தாமரைக்குளம், கெங்குவார்பட்டி ஆகிய பகுதிகளில் 182 ஏக்கர் அரசு நிலம் உள்ளது. இதற்கான 'அ' பதிவேட்டில் திருத்தம் செய்து வடபுதுப்பட்டியைச் சேர்ந்த முன்னாள் அதிமுக ஒன்றிய செயலாளர் அன்னப்பிரகாஷ் உள்ளிட்ட சில தனியாருக்கு முறைகேடாக பட்டா வழங்கப்பட்டது.

இதுகுறித்து 2021-ம் ஆண்டு பெரியகுளம் சார் ஆட்சியர் ரிஷப் அளித்த புகாரின் அடிப்படையில், கோட்டாட்சியர்கள் ஆனந்தி, ஜெயப்பிரிதா, வட்டாட்சியர்கள் ரத்தினமாலா, கிருஷ்ணகுமார், மண்டல துணை வட்டாட்சியர்கள் மோகன்ராம், உள்ளிட்ட 14 பேர் மீது மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர். பின்னர் இந்த வழக்கு தேனி சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், அரசு நிலங்களை தனியாருக்கு பட்டா போட்ட விவகாரத்தில் வட்டாட்சியர் கிருஷ்ணகுமாரை தேனி சிபிசிஐடி போலீசார் இன்று கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை தேனி மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி கோபிநாதன், கிருஷ்ணகுமாரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து கிருஷ்ணகுமார் கண்டமனூர் சாலையில் உள்ள தேக்கம்பட்டி சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்