இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.40 ஆயிரம் அபராதம்
தீ விபத்து ஏற்பட்ட கடைக்கு இன்சூரன்ஸ் தொகை வழங்காத இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.
நாகர்கோவில்,
தீ விபத்து ஏற்பட்ட கடைக்கு இன்சூரன்ஸ் தொகை வழங்காத இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.
இன்சூரன்ஸ் நிறுவனம்
கன்னியாகுமரி பார்க் வியூ பஜாரில் ரொசாரி போரஸ் என்பவர் பேன்சி கடை நடத்தி வந்தார். இந்த கடைக்கு ரூ.9 லட்சத்துக்கு இன்சூரன்ஸ் செய்திருந்தார். இந்த நிலையில் கடந்த 25-3-2012 அன்று ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அங்கு 25-க்கும் மேற்பட்ட கடைகள் தீயில் எரிந்தன. இதில் ரொசாரி போரஸ் கடையும் ஒன்றாகும். தீ விபத்து ஏற்பட்ட கடைகளில் ஒரு சில கடைகளுக்கு சம்பவம் நடந்து ஒரு ஆண்டுக்குள் இன்சூரன்ஸ் தொகை வந்துவிட்டது. ஆனால் ரொசாரி போரஸ் செலுத்திய இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து மட்டும் பணம் வரவில்லை.
எனவே அந்த இன்சூரன்ஸ் தொகையை பெற்று தரும்படி கன்னியாகுமரி ஜில்லா நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் தாமஸ் என்பவரிடம் ரொசாரி போரஸ் புகார் மனு அளித்தார். இதை தொடர்ந்து குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் தாமஸ் வழக்கு தொடர்ந்தார்.
ரூ.40 ஆயிரம் அபராதம்
இந்த வழக்கை நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி ரூ.40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
அதோடு அந்த அபராத தொகையை 1-5-2013 அன்றைய தினத்தில் இருந்து 6 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என்றும், வழக்கு செலவு ரூ.10 ஆயிரம் மற்றும் இன்சூரன்ஸ் தொகை ஆகியவற்றை 4 வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.