போலீசாரை தள்ளி விட்டு தப்பியோடிய கைதி சிக்கினார்

ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்கு வந்த போது போலீசாரை தள்ளிவிட்டு தப்பியோடிய கைதியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-11-09 18:45 GMT

ஊட்டி, 

ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்கு வந்த போது போலீசாரை தள்ளிவிட்டு தப்பியோடிய கைதியை போலீசார் கைது செய்தனர்.

மருத்துவ பரிசோதனை

நீலகிரி மாவட்டம் ஊட்டி காந்தல் பகுதியை சேர்ந்தவர் ஹரிஷ் என்ற ஜீவா (வயது 30). இவர் மீது மதுஅருந்தி தகராறு செய்தது, திருட்டு, போதைப்பொருள் பயன்பாடு உள்பட மேலும் சில வழக்குகள் ஊட்டி, கேத்தி போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ளது. இந்தநிலையில் ஒரு வழக்கு தொடர்பாக ஜீவா நீண்ட நாட்களாக கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார். இதனால் பிடிவாரண்ட் பிறப்பித்து ஊட்டி கோர்ட்டு உத்தரவிட்டது.

இதற்கிடையே கடந்த 31-ந் தேதி போலீசார் ஜீவாவை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் முடிவு செய்தனர். அப்போது ஜீவா தனக்கு வயிறு வலிப்பதாகவும், இரும்பு பொருளை விழுங்கி விட்டதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து மருத்துவ பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு ஜீவாவை போலீசார் அழைத்து சென்றனர்.

தப்பியோடிய கைதி சிக்கினார்

அரசு ஆஸ்பத்திரி என்பதால் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்தநிலையில் ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவு முன்பு நின்று கொண்டிருந்த ஜீவா, திடீரென போலீசாரை தள்ளிவிட்டு ஆஸ்பத்திரி சாலை வழியாக தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து உடனடியாக பிற போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து தப்பி ஓடிய கைதியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு காந்தல் பகுதியில் ஜீவா பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மணி குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜீவாவை கைது செய்தனர். பின்னர் ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் ஏற்கனவே சில வழக்குகளில் தொடர்புடைய ஜீவாவின் நண்பர்களான லோகேஷ், எட்வின் லாரன்ஸ் 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்