கரும்புக்கான ஊக்கத்தொகை டன்னுக்கு ரூ.300 உயர்த்தி வழங்க வேண்டும்

கரும்புக்கான ஊக்கத்தொகை டன்னுக்கு ரூ.300 உயர்த்தி வழங்க வேண்டும் என்று வேளாண்மைத்துறை அமைச்சரிடம் விவசாயிகள் மனு கொடுத்தனா்.

Update: 2023-06-28 18:45 GMT

விழுப்புரம்:

முண்டியம்பாக்கம் கரும்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் வக்கீல் பாண்டியன் தலைமையில் சங்க செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் பரமசிவம், துணைத்தலைவர் கலிவரதன், துணை செயலாளர் பெருமாள் உள்ளிட்டோர் சென்னை சென்று தமிழ்நாடு அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு, விவசாயிகள் சிரமமின்றி கரும்பு வெட்டும் எந்திரம் வாங்குவதற்கு ஏதுவாக வேளாண்மை நிதி நிலை அறிக்கையில் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு அறிவித்த, கரும்புக்கான ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு ரூ.195 என்பது விவசாயிகளுக்கு திருப்தியளிப்பதாக இல்லை. எனவே அரசு அறிவித்த கரும்புக்குரிய ஊக்கத்தொகை டன்னுக்கு ரூ.300 உயர்த்தி வழங்க வேண்டும். மேலும் புதுச்சேரி மாநிலம் லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்காமல் மூடிக்கிடப்பதால் அந்த ஆலைக்கு அனுப்பப்பட்டு வந்த மரக்காணம், வானூர் ஒன்றிய பகுதி கரும்புகளை முண்டியம்பாக்கம் ஆலைக்கு திரும்ப தர வேண்டும். கடந்த காலங்களில் இப்பகுதி கரும்புகள், முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலைக்குத்தான் அனுப்பி வைக்கப்பட்டு வந்தன. தற்போது கூட்டுறவு ஆலை மூடப்பட்டதால் திரும்பவும் பழைய நடைமுறையை அமல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்