உத்தமபாளையத்தில் பெண்ணை தீவைத்து எரித்த கணவர்

உத்தமபாளையத்தில் பெண்ணை தீவைத்து எரித்த கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2023-05-28 21:00 GMT

கம்பம் அருகே உள்ள நாராயணத்தேவன்பட்டியை சேர்ந்தவர் துரைப்பாண்டியன் (வயது 58). இவரது மனைவி தேவகனி (43). கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தேவகனி கோபித்துக்கொண்டு உத்தமபாளையத்தில் உள்ள தனது அண்ணன் வீட்டிற்கு வந்துவிட்டார்.

இந்தநிலையில் நேற்று உத்தமபாளையத்துக்கு வந்த துரைப்பாண்டியன், அங்கு தனது மனைவியை சந்தித்து பேசினார். அப்போது தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். ஆனால் அவர் வர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த துரைப்பாண்டியன், தான் ஏற்கனவே கொண்டு வந்த மண்எண்ணெய்யை எடுத்து தேவகனி மீது ஊற்றி தீவைத்தார். இதில், அவரது உடலில் தீப்பற்றி எரிந்தது. அவர் தீக்காயத்தால் அலறினார்.

இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் தேவகனி மீது எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தேவகனி அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான துரைப்பாண்டியை வலைவீசி தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்