கள்ளக்காதலியின் கணவர் வெட்டிக்கொலை

திருவெறும்பூர் அருகே கள்ளக்காதலியின் கணவரை வெட்டிக்கொன்ற தனியார் நிறுவன மேலாளர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-08-11 19:29 GMT

திருவெறும்பூர் அருகே கள்ளக்காதலியின் கணவரை வெட்டிக்கொன்ற தனியார் நிறுவன மேலாளர் கைது செய்யப்பட்டார்.

பெயிண்டர்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கீழ குமரேசபுரம் மாரியம்மன் கோவில்தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 48). இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சவுந்திரவள்ளி (45). இந்த தம்பதிக்கு ஆஷா சர்மிலி, சுவாதி, ஹரிணி ஆகிய 3 மகள்கள் உள்ளனர். இதில் ஆஷா சர்மிலி சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திலும், சுவாதி சென்னையில் தனியார் மருத்துவமனையில் நர்சாகவும் பணியாற்றி வருகின்றனர். ஹரிணி திருவெறும்பூர் ஐ.டி.ஐ.யில் படித்து வருகிறார். சவுந்திரவள்ளி வீட்டின் அருகே உள்ள எழில் நகர் பகுதியில் உள்ள ஒரு டெக்ரேசன் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.

கள்ளக்காதல்

இந்த நிறுவனத்தில் லால்குடியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (52) என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சவுந்திரவள்ளிக்கும், ராதாகிருஷ்ணனுக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இந்த விவகாரம் சரவணனுக்கு தெரியவந்ததால், சவுந்திரவள்ளியிடம் அவர் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.

இந்த நிலையில் சவுந்திரவள்ளி மகள் ஹரிணியை அழைத்துக்கொண்டு சென்னையில் உள்ள மகள்களை பார்க்க சென்று விட்டார். வீட்டில் சரவணன் மட்டும் தனியாக இருந்தார். நேற்று முன்தினம் இரவில் ராதாகிருஷ்ணன் மதுபாட்டில்களுடன் சரவணன் வீட்டுக்கு வந்தார். பின்னர் நயவஞ்சகமாக பேசி சரவணனுக்கு மது ஊற்றி கொடுத்துள்ளார். இருவரும் வீட்டில் அமர்ந்து மது அருந்தி உள்ளனர்.

வெட்டிக்கொலை

இதனிடையே கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக சரவணன் கேட்டதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ராதாகிருஷ்ணன் அரிவாளால் சரவணனை சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து ராதாகிருஷ்ணன் சென்னை சென்று இருந்த சவுந்திரவள்ளிக்கு போன் செய்து, உனது கணவரை வெட்டிக்கொலை செய்து விட்டேன் என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சவுந்திரவள்ளி திருவெறும்பூர் போலீசாருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்டு கிடந்த சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து லால்குடியில் பதுங்கி இருந்த ராதாகிருஷ்ணனை கைது செய்தனர். மேலும் இந்த கொலையில் தூண்டுதல், சதிதிட்டம் ஏதேனும் உள்ளதா? எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்