வாலிபர் மீது பாலியல் புகார் கொடுக்க வற்புறுத்திய கணவர்
பண்ருட்டி அருகே வாலிபர் மீது பாலியல் புகார் கொடுக்க கணவர் வற்புறுத்தியதாக போலீசில் பெண் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பண்ருட்டி,
பண்ருட்டி அருகே உள்ள வீரசிங்கன்குப்பத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் மனைவி சந்தியா(வயது 28). இவரது நடத்தையில் சந்தேகம் கொண்ட ராஜ்குமார், இது தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே ஊரை சேர்ந்த சரவணன்(27) என்பவரிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது சரவணனின் காரை ராஜ்குமார் பெட்ரோல் ஊற்றி எரித்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வந்த அவர், சரவணனை பழி வாங்குவதற்காக அவர் மீது போலீஸ் நிலையத்தில் பாலியல் புகார் கொடுக்க தனது மனைவி சந்தியாவை வற்புறுத்தினார்.
போலீசார் விசாரணை
ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த அவரை ராஜ்குமார், அவரது தந்தை பொன்னம்பலம், தாயார் வைரம், தம்பி ஆனந்தகுமார் ஆகியோர் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து சந்தியா கொடுத்த புகாரின் பேரில் ராஜ்குமார் உள்பட 4 பேர் மீது முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.