வீடு கட்டும் திட்ட பணிகளை குறித்த காலத்துக்குள் முடிக்க வேண்டும்
வீடு கட்டும் திட்ட பணிகளை குறித்த காலத்துக்குள் முடிக்க வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி அறிவுறுத்தி உள்ளார்.
திருவெண்காடு:
வீடு கட்டும் திட்ட பணிகளை குறித்த காலத்துக்குள் முடிக்க வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி அறிவுறுத்தி உள்ளார்.
சீர்காழி
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேற்று காலை திடீரென சீர்காழி புதிய பஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கழிவறையில் உரிய கட்டணம் வசூல் செய்யப்படுகிறதா? சுகாதாரமாக பராமரிக்கப்படுகிறதா? என கேட்டறிந்தார். அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட கட்டண தொகை பற்றி அறிவிப்பு பலகை வைக்க அறிவுறுத்திய அவர், பஸ் நிலையத்தில் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கும் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது கோட்டாட்சியர் அர்ச்சனா, தாசில்தார் செந்தில்குமார், நகராட்சி ஆணையர் வாசுதேவன் ஆகியோர் உடன் இருந்தனர்.
கொள்ளிடம்
கொள்ளிடம் அருகே தொடுவாய் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமாக உள்ளதா? என்று மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அங்கு பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பணியினை கலெக்டர் நேரில் பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்தில் இதுவரை நடைபெற்றவளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை தாங்கி, 'வளர்ச்சி திட்ட பணிகளை உடனுக்குடன் முடிக்க வேண்டும். அரசின் வீடுகள் கட்டும் திட்ட பணிகளை குறித்த காலத்துக்குள் முடிக்க வேண்டும். மயிலாடுதுறை மாவட்டத்தை முன்மாதிரி மாவட்டமாக மாற்றுவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்' என்றார்.
கூட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா, ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ், துணைத் தலைவர் பானுசேகர், ஒன்றியக்குழு உறுப்பினர் லெட்சுமிபாலமுருகன், உதவி இயக்குனர் மஞ்சுளா, உதவி இணை இயக்குனர் தணிக்கை கோவிந்தராஜ், செயற்பொறியாளர் பிரேம்குமார், ஆணையர் அருள்மொழி, வட்டார வளர்ச்சி அலுவலர் ரெஜினா ராணி, ஒன்றிய பொறியாளர்கள் தாரா, பூர்ணசந்திரன், பலராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.