இறந்தவர்களின் உடலை வயல்வெளி வழியாக தூக்கிச்செல்லும் அவலம்
ஸ்ரீமுஷ்ணம் அருகே சுடுகாட்டுக்கு பாதை வசதி இல்லாததால் இறந்தவர்களின் உடலை வயல் வெளி வழியாக தூக்கிச்செல்லும் அவல நிலை இருந்து வருகிறது.
ஸ்ரீமுஷ்ணம்:
ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மேல்புளியங்குடி கிராமத்தில் ஊர்த்தெரு மற்றும் காலனி தெரு ஆகிய 2 தெரு பகுதி மக்களுக்கும் தனித்தனியாக 2 சுடுகாடுகள் உள்ளன. இங்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கும் ஊர் தெருவுக்கான சுடுகாட்டுக்கு பாதை வசதி இல்லை. இதனால் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரம் நெல் வயல்வெளி வழியை கடந்து சென்று இறந்தவரின் உடலை சுடுகாட்டுக்கு சுமந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.
நேற்று ஊர்தெருவில் இறந்தவரின் உடலை அவரது உறவினர்கள் பூப்பல்லக்கில் வைத்து சுமந்து நெல் வயல் வெளி வழியாக மிகவும் சிரமப்பட்டு சுடுகாட்டுக்கு கொண்டு சென்றனர்.
நிலம் தேவைப்படுகிறது
இது குறித்து ஊர்த்தெருவை சேர்ந்தவர்கள் கூறும்போது, உள்ளாட்சி தேர்தலின் போது குறிப்பிட்ட வயலின் சொந்தக்காரர் சுடுகாட்டுக்கு பாதை அமைத்து தருவதாக வாக்குறுதி அளித்து தேர்தலில் வெற்றி பெற்றார். மெயின் ரோட்டில் இருந்து மற்றொரு வழியாக சுடுகாட்டுக்கு பாதை அமைத்தால் அரை கிலோ மீட்டர் தூரத்துக்குள்ளாக பாதையை அமைத்துக்கொள்ளலாம் என்றும், ஆனால் இதற்கு காலனி தெருவை சேர்ந்த சிலரின் நிலமும் குறுக்கே தேவைப்படுவதால் இது குறித்து பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கூறிய நிலத்தின் உரிமையாளர் பாதை தர சம்மதித்துள்ளார் என்றனர்.
மழைக்காலங்களில் வயலில் தேங்கி நிற்கும் நீரிலும், கரும்பு, நெல் போன்ற பயிர்களின் வழியாக இறந்தவர்களின் உடல்களை மிகவும் சிரமப்பட்டு தூக்கி செல்லும் அவலத்தை போக்கி சுடுகாட்டுக்கு பாதை அமைத்து தர வேண்டும் என்பதே கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.