இந்து மக்கள் கட்சி தலைவரை வீடியோ எடுத்தவரால் பரபரப்பு
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இந்து மக்கள் கட்சி தலைவரை வீடியோ எடுத்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இந்து மக்கள் கட்சி தலைவரை வீடியோ எடுத்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.
வீடியோ எடுத்த நபர்
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் நேற்று திருவண்ணாமலைக்கு வருகை தந்தார். பின்னர் அவர் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்குள் நிர்வாகிகளுடன் சென்றார்.
கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் அவர் அம்மன் சன்னதியில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவரை ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். இதைப்பார்த்த கட்சி நிர்வாகிகள் மற்றும் உளவு பிரிவு போலீசார் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பொதுமக்களில் யாரோ ஒருவர் தான் வீடியோ எடுக்கிறார் என்று கருதினர்.
பின்னர் வீடியோ எடுத்த நபர் கையில் வேறு மதத்தை சேர்ந்த அடையாள குறியீடுகள் இருந்தது. இதைப்பார்த்த கட்சியினர் அந்த நபர் அர்ஜூன் சம்பத்தை வீடியோ எடுக்க அனுமதிக்கவில்லை. மேலும் அவர் யார்? என்று விசாரணை நடத்தினர். உடனடியாக தனிப்பிரிவு போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
போலீஸ் விசாரணை
பின்னர் அந்த நபரை திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அதில் அவர், கலசபாக்கத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவர் எதற்காக வீடியோ எடுத்தார் என்பது குறித்து தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் நிலையத்துக்கு இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் வந்தனர். இதனால் பரபரப்பாக காணப்பட்டது.
பேட்டி
பின்னர் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் செங்கோல் இடம் பெறுவது நமக்கு பெருமை சேர்த்துள்ளது. சில அரசியல் கட்சிகள் அதைப் புறக்கணிப்போம் என்று அரசியல் பார்ப்பது அவசியமல்ல.
அவிநாசி கோவிலில் பாதுகாப்பு இல்லாத காரணத்தினால் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோன்ற நிலை திருவண்ணாமலை கோவிலுக்கு நிகழக்கூடாது. எனவே கோவில்களில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இன்று (நேற்று) நாங்கள் கோவிலுக்கு சென்ற போது கூட மர்மநபர் ஒருவர் எங்கள் பின்னால் வந்தார். அவரை போலீசில் பிடித்து கொடுத்துள்ளோம். எனவே இங்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த வேண்டும்.
வருகிற 5-ந்தேதி உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் சனாதன இந்து தர்ம எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. 1,008 சாதுக்கள், 1,008 சுமங்கலி பெண்கள் இங்கு கிரிவலம் நிகழ்ச்சியை நடத்த உள்ளனர். மீண்டும் நரேந்திர மோடி பிரதமராக வேண்டும் என்று பிரார்த்தனையும் நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.