பால் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்

தமிழகத்தில் பால் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று கன்னியாகுமரியில் சி.ஐ.டி.யு. மாநில தலைவர் சவுந்தரராஜன் கூறினார்.

Update: 2022-11-05 20:33 GMT

கன்னியாகுமரி:

தமிழகத்தில் பால் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று கன்னியாகுமரியில் சி.ஐ.டி.யு. மாநில தலைவர் சவுந்தரராஜன் கூறினார்.

மாநில மாநாடு

இந்திய தொழிற்சங்க மையமத்தில் (சி.ஐ.டி.யு.) மாநில 15-வது மாநாடு கன்னியாகுமரியில் நடைபெற்று வருகிறது. மாநாட்டில் நேற்று முன்தினம் கொடி சமர்ப்பித்தல், தியாகிகளுக்கு அஞ்சலி, பிரதிநிதிகள் மாநாடு ஆகியவை நடைபெற்றது. நேற்று பிரதிநிதிகளின் விவாதம் நடந்தது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சி.ஐ.டி.யு. மாநில தலைவர் சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சி.ஐ.டி.யு. மாநாட்டில் நாளை (அதாவது இன்று) நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தில் இருந்து 1 லட்சம் பேர் பங்கேற்கும் செஞ்சட்டை பேரணி நடக்கிறது. தொடர்ந்து நாகராஜா திடலில் பொதுக்கூட்டம் நடைபெறும்.

மத்திய அரசு நமது சமூகத்தில் அமைதியையும் பொருளாதாரத்தையும் அழிவுப்பாதைக்கு கொண்டு செல்கிறது. பல தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன.

பணம் மதிப்பு வீழ்ச்சி

நமது பணத்தின் மதிப்பு வீழ்ந்துகொண்டே இருக்கிறது. அன்னிய செலாவணி வீழ்ச்சி அடைகிறது. 'ஏன் ரூபாய் மதிப்பு குறைந்துவிட்டது' என்று கேட்டால் 'ரூபாய் மதிப்பு குறையவில்லை டாலர் மதிப்பு கூடி விட்டது' என்று கூறுகிறார்கள். இவையெல்லாம் மிக மோசமான அறிகுறி. இலங்கையில் இருந்த அறிகுறிகள் இப்போது இந்தியாவில் இருப்பது தெளிவாக தெரிகிறது. எனவே மத்திய அரசு தனது கொள்கைகளில் உடனடியாக மாற்றம் கொண்டு வர வேண்டும்.

நவீன தொழிற்சாலைகளில் எந்திர மனிதர்கள் பயன்படுத்துவது அதிகரிப்பதால் இருக்கிற வேலையும் பறிபோகிறது.

மின்சாரம், பால் கட்டணம் உயர்வு

தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு, அதையொட்டி இங்கு எழுப்பப்படும் பிரச்சினைகள் தான் விவாதத்துக்கு வரவேண்டும் என பா.ஜனதா விரும்புகிறது.

இது ஒருபக்கம் இருக்க தமிழக அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தேர்தல் அறிக்கையில் ஏராளமான வாக்குறுதிகளை கொடுத்தார்கள். அந்த வாக்குறுதிகள் இன்னும் நிறைவேறவில்லை. பழைய ஓய்வூதியம் ஆட்சிக்கு வந்தால் கொடுப்போம் என்றார்கள். ஆனால், கொடுக்கவில்ைல. அரசின் செயல் எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறோம்.

மின்சார கட்டணம், பால் விலை உயர்த்தப்பட்டதை நாங்கள் கடுமையாக ஆட்சேபிக்கிறோம். விலை உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும்.

சொத்துவரி உயர்வு மோசமானது. சென்னை போன்ற நகரங்களில் தண்ணீர் கட்டணத்தை கடுமையாக உயர்த்தியுள்ளார்கள். இவையெல்லாம் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது என்பதை மாநில அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

அதே நேரத்தில் நீட், மொழி, மாநில உரிமை போன்றவற்றில் மத்திய அரசு நடவடிக்கைக்கு எதிரான மாநில அரசின் நிலைப்பாட்டுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்