மடுவந்துறை அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்
கல்வராயன் மலை தொடரில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தண்டராம்பட்டு அருகில் உள்ள மடுவந்துறை அருவியில் மழை வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
கல்வராயன் மலை தொடரில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தண்டராம்பட்டு அருகில் உள்ள மடுவந்துறை அருவியில் மழை வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
கல்வராயன் மலை தொடரில் மழை
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகில் உள்ள கல்வராயன் மலை தொடர் பகுதியில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள கீழ்வலசை, மேல்வலசை, அக்கரைப்பட்டி, ஆத்திப்பாடி ஆகிய மலை கிராமங்களில் உள்ள சிற்றருவி, வனாந்துறை அருவி, குழந்தைகள் அருவிகளில் மழை வெள்ளம் வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக தண்டராம்பட்டு அருகில் உள்ள பீமாரபட்டி வனப்பகுதியில் அமைந்துள்ள மடுவந்துறை அருவியில் மழை வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
கண்ணுக்கு விருந்தளிக்கும் இந்த காட்சியை பார்ப்பதற்கும், குளித்து மகிழவும் தானிப்பாடி, ரெட்டியார்பாளையம், மலையனூர், செக்கடி, தண்டராம்பட்டு ஆகிய பகுதிகளை சார்ந்த பொதுமக்கள் மட்டுமின்றி தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்களும் இந்த அருவிக்கு குளிக்க வந்து செல்கின்றனர்.
வனத்துறை தடை
இந்த அருவிக்கு செல்வதற்கு போதிய பாதை வசதி இல்லாமல் இருப்பதோடு இங்கு பொதுமக்கள் வந்து குளிக்கவும் வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் பொதுமக்கள் வனத்துறைக்கு தெரியாமல் வந்து செல்கின்றனர்.
இந்த அருவியை ஒட்டி எழில்மிகு மலை தோற்றம், பழமை வாய்ந்த மரங்கள் என சுற்றுலா தளம் போல இந்த இடம் அமைந்துள்ளது. எனவே பொதுமக்கள் சுற்றி பார்க்க வனத்துறை அனுமதிப்பதோடு இந்த பகுதிக்கு செல்ல போதிய பாதை வசதி செய்து இதனை சுற்றுலா இடமாகவும் மாற்றியமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.