தஞ்சை அருகே பிறந்த நிலையில் பச்சிளம் ஆண் குழந்தை வயலில் கிடந்தது. அந்தக் குழந்தை மீட்கப்பட்டு 108 ஆம்புலன்சு மூலம் தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில் ஒப்படைக்கப்பட்டது.
பச்சிளம் ஆண் குழந்தை
தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே உள்ளது வேலுப்பட்டி. இங்குள்ள ஒரு வயலில் நேற்று காலை குழந்தையின் அழுகுரல் கேட்டது. இந்த சத்தம் கேட்டு அந்த பகுதி வழியாக சென்றவர்கள் சத்தம் வந்த இடத்திற்கு சென்று பார்த்த போது அங்கு பிறந்த பச்சிளம் குழந்தை, தொப்புள்கொடியுடன் கிடந்தது.
உடம்பில் துணி கூட சுற்றப்படாத நிலையில் அந்த குழந்தை கிடந்தது. இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் அருகில் உள்ளவர்கள் வந்து குழந்தையை அருகில் உள்ள வீட்டில் பாதுகாப்பாக எடுத்து வைத்திருந்தனர்.
ஆஸ்பத்திரியில் ஒப்படைப்பு
மேலும்இது குறித்து பூதலூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்றனர். அதற்குள் 108 ஆம்புலன்சு அங்கு வந்தது. டெக்னீசியன் கவுசல்யா, டிரைவர் முருகேசன் ஆகியோர் போலீசார் உதவியுடன் அந்த குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்து பூதலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.பின்னர் அவர்கள் தஞ்சை ராசா மிராசுதார் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு கூறினார். அதன் பேரில் அந்த குழந்தை தஞ்சை ராசா மிராசுதார் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து தொட்டில் குழந்தை திட்டத்தில் ஒப்படைத்தனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது குழந்தை நல்ல நிலையில் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
தவறான உறவால் பிறந்ததா?
மேலும் தவறான உறவால் பிறந்ததால் தாய் குழந்தையை வயல் வெளியில் போட்டு விட்டு சென்றாரா? என தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.