மத்திய அரசின் கொள்கைகளை கவர்னர் நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறார்

தமிழக கவர்னர் தொடர்ந்து மாநில அரசுக்கு விரோதமாக மத்திய அரசின் கொள்கை களை நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்

Update: 2022-09-13 18:24 GMT

கள்ளக்குறிச்சி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கள்ளக்குறிச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மின் கட்டண உயர்வு

தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு மின் கட்டண உயர்வை முதல்-அமைச்சர் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக கவர்னர் தொடர்ந்து மாநில அரசுக்கு விரோதமாக மத்திய அரசின் கொள்கைகளை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறார்.

கரூரில் சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் மணல் மற்றும் கல்குவாரிகளை மூடக்கோரி போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர் ஜெகநாதன் என்பவரை லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது குடும்பத்திற்கு அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.

கொலைகள் அதிகரிப்பு

தமிழ்நாட்டில் சமூகவிரோதிகள் எது வேண்டு மென்றாலும் செய்யலாம் என்கிற போக்கு நல்லதல்ல. கொலைகள் அதிகரித்து வருவதை தடுக்க காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்ற முதல்-அமைச்சரின் வார்த்தைகளை மதித்தோம். ஆனால் தற்போது நீதிமன்ற உத்தரவு வழக்கையே தலைகீழாக மாற்றி அமைத்து விட்டது. முதல்-அமைச்சரின் வாக்குறுதியை மீறி, பள்ளி நிர்வாகத்துக்கு ஆதரவாக காவல் துறையும், சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் செயல்படுவதாக சந்தேகம் உள்ளது.

போராட்டம்

இந்த மாதம் 3-வது வாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி கேட்டும், காவல்துறையை கண்டித்தும் மாபெரும் போராட்டம் நடத்தப்பட உள்ளது. முதல்-அமைச்சர் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் காவல்துறையின் விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர் மற்றும் ஸ்டாலின்மணி உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்