அமைச்சரை டிஸ்மிஸ் செய்வதற்கு கவர்னருக்கு அதிகாரம் கிடையாது
அமைச்சரை டிஸ்மிஸ் செய்வதற்கு கவர்னருக்கு அதிகாரம் கிடையாது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறி்னார்.
புதுக்கோட்டையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியதாவது:-
தமிழ்நாட்டில் கவர்னர் சர்வாதிகாரி போன்று செயல்படுகிறார். ஜனநாயகம் இருக்கிறதா இல்லையா என்பது 2024-ம் ஆண்டு தேர்தலில் தான் தெரியும். கவர்னருக்கு அமைச்சரை டிஸ்மிஸ் செய்வதற்கு அதிகாரம் கிடையாது. சட்டரீதியாக இதை எதிர்த்து நாளை (இன்று) நடவடிக்கை எடுக்கப்படும். கவர்னர் தனது வரம்பை மீறி தான்தோன்றித்தனமாக செயல்படுகிறார். இது நல்லதுக்கு அல்ல. அவருடைய அதிகாரம் என்ன என்பது அவருக்கே தெரியவில்லை. அமைச்சரவை கூடி என்ன முடிவு செய்கிறதோ அதை ஒப்புக்கொண்டு தன்னுடைய ஒப்புதலை தருவதுதான் கவர்னரின் கடமை.
பா.ஜ.க.வின் அடிமையாக உள்ள அ.தி.மு.க. போன்ற கட்சிகள் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுப்பது கிடையாது. குறிப்பாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை சோதனை நடத்திய போது கட்டுக்கட்டாக ஆவணங்கள் வெளியில் தூக்கி வீசப்பட்டது. அது குறித்து அமலாக்கத்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள கவர்னர் இதுபோன்று அமைச்சர்களை நீக்க முடியுமா? இதற்கு முற்றுப்புள்ளி வைக்க 2024-ம் தேர்தலில் மக்கள் முடிவு செய்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.