தமிழகத்தில் பா.ஜனதாவின் நிழல் தலைவராக கவர்னர் செயல்படுகிறார்; அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றச்சாட்டு

தமிழகத்தில் பா.ஜனதாவின் நிழல் தலைவராக கவர்னர் செயல்படுகிறார் என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

Update: 2023-05-13 18:45 GMT

குலசேகரம், 

தமிழகத்தில் பா.ஜனதாவின் நிழல் தலைவராக கவர்னர் செயல்படுகிறார் என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

பொதுக்கூட்டம்

குலசேகரத்தில் தி.மு.க. அரசின் 2-ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு திருவட்டார் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜான்சன் தலைமை தாங்கினார். இதில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பா.ஜ.க. நிழல் தலைவர்

தமிழக கவர்னர் பா.ஜனதாவின் கைப்பாவையாக செயல்படுகிறார். தமிழக பா.ஜனதாவுக்கு இரட்டை தலைமை உள்ளது. இதில் அண்ணாமலை தலைவராகவும், கவர்னர் நிழல் தலைவராகவும் உள்ளனர். திராவிடம் செத்துப் போய் விட்டதாக கவர்னர் கூறுகிறார். திராவிடம் செத்துப் போனதென்றால் ஆரியம் மட்டும் வாழ்கிறதா?. சனாதன தர்மம் ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு கல்வியை மறுத்தது. இந்த நாட்டில் பாரம்பரியம் மிக்க அரண்மனைகள் இருக்கின்றன என்று கூறுபவர்கள், அந்தக் காலத்தில் ஏழைகளுக்கு இருந்த வீடுகளைக் காண்பிக்க முடியுமா?.

தோள் சீலை போராட்டத்தின் 200-வது ஆண்டு குறித்து பேசினால், இப்போது பழைய விஷயங்களை ஏன் பேச வேண்டும் என்று கேட்கிறார்கள். பழைய விஷயங்களை பேசித்தான் ஆக வேண்டும். சனாதனம் என்பது நம்மை அடிமைப்படுத்தும் ஒன்றாகும். கேரளாவில் முஸ்லிம்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட சினிமாவை எல்லா இடங்களிலும் பரப்புங்கள் என பிரதமர் மோடி கூறுகிறார். அதே நேரத்தில் குஜராத் கலவரம் தொடர்பாக பி.பி.சி. எடுத்த ஆவணப்படத்தை தடுக்கிறார்கள். ஒரு புறம் இலவசங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரி என்று கூறும் பா.ஜ.க. தலைவர்கள், கர்நாடகா மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தின் போது பல்வேறு இலவச திட்டங்களை அறிவித்தனர்.

சுற்றுலாதலங்கள் மேம்பாடு

கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது 3 ஆயிரம் பேருக்கு புதிதாக முதியோர் உதவித்தொகை பெற்றுக் கொடுத்துள்ளோம். 400 ஆண்டுகளுக்கு மேலாக கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்த திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடத்தியுள்ளோம். இதே போன்று 12 சிவாலயங்கள் உள்பட பல்வேறு கோவில்களில் திருப்பணிகள் செய்துள்ளோம். மாத்தூர் தொட்டிப்பாலம், முட்டம், திற்பரப்பு அருவி போன்றவற்றில் சுற்றுலா மேம்பாட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்திற்கும், திருவள்ளுவர் சிலைக்கும் இடையே கண்ணாடி பாலம் அமைக்க உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் ரீமோன் மனோ தங்கராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் அலாவுதீன், மாவட்ட துணைச் செயலாளர் புஷ்பலீலா ஆல்பன், ஒன்றிய துணைச் செயலாளர்கள் ஜோஸ் எட்வர்ட், அயக்கோடு காந்தி, மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு அணி அமைப்பாளர் ஜெஸ்டின் பால்ராஜ், வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஜே.எம்.ஆர். ராஜா, ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய அவைத் தலைவர் செல்லப்பன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்