இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

தொடக்கக்கல்வித்துறையில் மட்டும் 97 ஆயிரத்து 211 வகுப்புகளுக்கு ஆசிரியர் இல்லாத நிலை இருக்கிறது என்றும், உடனடியாக இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.

Update: 2022-06-14 22:22 GMT

சென்னை,

தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் கடுமையான ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. மாணவர்களின் உயர்கல்விக்கு வலிமையான அடித்தளம் அமைப்பது தொடக்கக் கல்விதான் என்னும் நிலையில், அதை வலுப்படுத்த இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

தமிழ்நாட்டில் தொடக்கக்கல்வித்துறையின் கீழ் செயல்பட்டுவரும் 22 ஆயிரத்து 831 தொடக்கப்பள்ளிகள், 6 ஆயிரத்து 587 நடுநிலைப்பள்ளிகள் என மொத்தம் 29 ஆயிரத்து 418 பள்ளிகளில் பணியாற்றும் மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை 69 ஆயிரத்து 640 மட்டும்தான். இந்த பள்ளிகளில் வகுப்புக்கு ஒரே ஒரு பிரிவு என்று வைத்துக்கொண்டால்கூட, தொடக்கப்பள்ளிகளில் 1 லட்சத்து 14 ஆயிரத்து 155 வகுப்புகள், நடுநிலைப் பள்ளிகளில் 52 ஆயிரத்து 696 வகுப்புகள் என மொத்தம் 1 லட்சத்து 66 ஆயிரத்து 851 வகுப்புகள் இருக்கக்கூடும். அதன்படி பார்த்தால் 97 ஆயிரத்து 211 வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லை.

அரசு நடவடிக்கை

தொடக்கப்பள்ளிகளிலும், நடுநிலைப்பள்ளிகளிலும் வகுப்புக்கு ஓர் ஆசிரியர் நியமிக்கப்படுவதை ஈராண்டு திட்டமாக செயல்படுத்த வேண்டும். தொடக்கக் கல்வித்துறையில் மட்டும் 97 ஆயிரத்து 211 வகுப்புகளுக்கு ஆசிரியர் இல்லாத நிலையில், பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளையும் கணக்கில் கொண்டால் இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் கூடுதலாக இருக்கும்.

அந்த இடங்களை நிரப்பும் வகையில், ஆண்டுக்கு 50 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் இதுவரை நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்ற 80 ஆயிரம் பேருக்கும், விரைவில் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெறுவோருக்கும் அரசு வேலை வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்