கோவிலுக்கு சொந்தமான இடங்களை மீட்க அரசு முன்வர வேண்டும்பவானியில் எச்.ராஜா பேட்டி
கோவிலுக்கு சொந்தமான இடங்களை மீட்க அரசு முன்வர வேண்டும் என்று பவானியில் எச்.ராஜா கூறினாா்
பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா நேற்று ஈரோடு மாவட்டம் பவானிக்கு வந்தார். அப்போது அவருக்கு ஈரோடு வடக்கு மாவட்டம் பா.ஜ.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து எச்.ராஜா சங்கமேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழகத்தில் கோவில்களுக்கு சொந்தமான நஞ்சை, புஞ்சை, மானாவாரி இடங்கள் என மொத்தம் 4 லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் உள்ளது. இதில் 4 ஆயிரம் ஏக்கர் நிலம் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். எனவே மீதமுள்ள அனைத்து நிலங்களையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீட்கப்பட்ட இடங்கள் கம்பி வேலி போட்டு பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு பணம் இல்லை என்றால் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மூலம் பணத்தை ஏற்பாடு செய்து தருகிறோம்.
இவ்வாறு எச்.ராஜா கூறினார்.
பேட்டியின்போது பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் சித்தி விநாயகம், ஈரோடு வடக்கு பா.ஜ.க. மாவட்ட தலைவர் கலைவாணி விஜயகுமார், வடக்கு மாவட்ட செயலாளர் கண்ணன், பவானி நகரத் தலைவர் நந்தகுமார் மற்றும் கட்சியினர் உடனிருந்தனர்.