தாறுமாறாக ஓடிய அரசு பஸ்
சின்னசேலம் அருகே அரசு பஸ் தாறுமாறாக ஓடியதால் குடிபோதையில் இருந்ததாக கூறி டிரைவரிடம் பயணிகள் வாக்குவாதம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சின்னசேலம்
அரசு பஸ்
சின்னசேலம் அருகே செட்டியந்தல் மேற்கு காட்டுக்கொட்டாய், தட்டான்காடு பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார்(வயது 45). இவர் அரசு போக்குவரத்து கழகம் சின்னசேலம் பணிமனையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
சதீஷ்குமார் நேற்று மதியம் கச்சிராயப்பாளையம் பஸ் நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சின்னசேலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். கண்டக்டராக சரவணன் என்பவர் பணியில் இருந்தார். பெண்களுக்கு பயண கட்டணம் கிடையாது என்பதால் பஸ்சில் ஆண்களை விட கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்கள் அதிக அளவில் இருந்தனர்.
தாறுமாறாக ஓடியது
இந்த நிலையில் கடத்தூர் அரசமர பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது திடீரென பஸ் சாலையில் தாறுமாறாக ஓடியது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் குடிபோதையில் டிரைவர் பஸ்சை ஓட்டிச் செல்வதாக கூறி பஸ்சை நிறுத்த சொல்லி கூச்சல் எழுப்பினர். உடனே கண்டக்டர் சரவணன் ஓடி சென்று பஸ்சை நிறுத்துமாறு டிரைவரிடம் கூறினார். இதையடுத்து கடத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு டிரைவர் பஸ்சை ஓரமாக நிறுத்தினார்.
டிரைவரிடம் வாக்குவாதம்
பின்னர் பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் டிரைவரை சூழ்ந்து கொண்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை கண்டக்டர் மற்றும் பொதுமக்கள் சமாதானம் செய்தனர்.
இதையடுத்து பின்னால் வந்த எண் 47 வழித்தட அரசு பஸ்சில் பயணிகளை அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த பணிமனை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து அரசு பஸ்சை பணிமனைக்கு ஓட்டிச் சென்றனர்.
அதிகாரிகள் விசாரணை
மது அருந்திவிட்டு டிரைவர் ஓட்டிச்சென்றதால் பஸ் தாறுமாறாக ஓடியதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பணியிடை நீக்கம்
இந்த நிலையில் பொதுமக்கள் தெரிவித்த புகாரை அடுத்து டிரைவர் சதீஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்து அரசு போக்குவரத்துகழக விழுப்புரம் கோட்ட நிர்வாக இயக்குனர் ஜோசப்டயஸ் உத்தரவிட்டுள்ளார்.