அம்மன் கோவிலில் கொள்ளையடித்த வாலிபர் கைது

ராஜாக்கமங்கலம் அருகே அம்மன் கோவிலில் கதவை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் புதைத்த நகையும் மீட்கப்பட்டது.

Update: 2022-05-29 16:34 GMT

ராஜாக்கமங்கலம்:

ராஜாக்கமங்கலம் அருகே அம்மன் கோவிலில் கதவை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் புதைத்த நகையும் மீட்கப்பட்டது.

கோவிலில் கொள்ளை

ராஜாக்கமங்கலம் அருகே உள்ள தெக்குறிச்சி பகுதியில் முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் காலை, மாலையில் வழிபாடு நடைபெறுவது வழக்கம். சம்பவத்தன்று இரவும் பூஜைகளை முடித்த பூசாரி சிவசுப்பிரமணியன் கோவிலை பூட்டி விட்டு சென்றார். மறுநாள் காலையில் பூஜை செய்வதற்காக அதிகாலையில் கோவிலுக்கு வந்தார்.

அப்போது கோவில் கதவுகள் அனைத்தும் உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த 6 கிராம் தங்க தாலி, டாலர் மற்றும் அருகில் உண்டியலும் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணமும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

வாலிபர் கைது

உடனே சிவசுப்பிரமணியன் இதுபற்றி ஊர் நிர்வாகிகளுக்கும், ராஜாக்கமங்கலம் போலீசுக்கும் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் ராஜாக்கமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அதே ஊரை சேர்ந்த குமரேசன் மகன் விஜய் (வயது 33) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் விஜய்யை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் கோவில் நகை மற்றும் உண்டியலை உடைத்து பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டார்.

அதைதொடர்ந்து போலீசார் விஜய்யை கைது செய்தனர். மேலும் அவரது வீட்டின் பின்புறத்தில் புதைத்து வைத்திருந்த நகையையும் போலீசார் மீட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்