"2025-ம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத தமிழகத்தை உருவாக்க இலக்கு" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
காசநோயில்லா தமிழகத்தை உருவாக்க நிதி ஒதுக்கீடு ரூ.68.22 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை சேத்துப்பட்டில் உள்ள தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் 65-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் காசநோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த காணொளியை அவர் வெளியிட்டார்.
இதைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், 2025-ம் ஆண்டுக்குள் 100 சதவீதம் காசநோய் இல்லாத தமிழகம் என்ற இலக்கை எட்டுவதற்காக பல்வேறு திட்டங்களும், முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். காசநோயில்லா தமிழகத்தை உருவாக்க நிதி ஒதுக்கீடு ரூ.31.32 கோடியில் இருந்து ரூ.68.22 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்த விழாவில் கலந்து கொண்ட ஐ.சி.எம்.ஆர். நிறுவனத்தின் துணை இயக்குனர் ராமகிருஷ்ணன், காசநோய்க்கான தடுப்பூசி தயாரிப்பு சோதனை முறையில் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.