கொன்று புதைக்கப்பட்ட இளம்பெண் 3 மாதம் கர்ப்பம்

விழுப்புரம் அருகே கொன்று புதைக்கப்பட்ட இளம்பெண் 3 மாதம் கர்ப்பமாக இருந்தது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

Update: 2023-05-10 18:45 GMT

செஞ்சி:

விழுப்புரம் அருகே சாலவனூர் சுடுகாடு பகுதியில் உள்ள ஏரியில் கடந்த 6-ந் தேதி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் பள்ளம்தோண்டும் பணி நடைபெற்றது. அப்போது இளம்பெண் ஒருவர், கொன்று புதைக்கப்பட்டு இருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள், கிராம நிர்வாக அலுவலர் லோகநாதனுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர் நேரில் சென்று பார்த்தார். அதில், 25 வயதுடைய அடையாளம் தெரியாத பெண்ணின் உடல் என்பதும், உடல் சரியாக அடக்கம் செய்யப்படாமல் அழுகிய நிலையில் இருந்ததும் தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில் கஞ்சனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

3 மாதம் கர்ப்பம்

மேலும், இளம்பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று வெளியான பிரேத பரிசோதனை அறிக்கையில், அந்த இளம்பெண் 3 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இந்த அதிர்ச்சி தகவலை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த இளம் பெண் திருமணம் ஆகாமல் கர்ப்பமானதால் அவரை யாரோ கொலை செய்து சுடுகாட்டு பகுதியில் உடலை புதைத்திருப்பதும் தெரியவந்தது.

மேலும் அந்த இளம்பெண் பிங்க் நிற லெக்கின்சும், கருநீல நிற பூப்போட்ட டாப்சும், கவரிங் செயின், ஜிமிக்கி, மூக்குத்தி, சிவப்பு நிற அரைஞாண் கயிறு, பச்சை நீல நிற துணி சுற்றிய கல்பதித்த பிளாஸ்டிக் வளையல் ஆகியவற்றை அணிந்திருந்தார்.

ஆனால் அந்த இளம்பெண் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்த விவரம் தெரியவில்லை. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்