காலை உணவு சரி இல்லை எனக்கூறி அரசு தொடக்கப்பள்ளியை பூட்டிய பெண்ணால் பரபரப்பு-அதிகாரிகள் விசாரணை

காலை உணவு சரி இல்லை எனக்கூறி அரசு தொடக்கப்பள்ளியை பூட்டிய பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

Update: 2023-08-29 21:15 GMT

ஓமலூர்:

ஓமலூரை அடுத்த கஞ்சநாயக்கன்பட்டி காலனியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. இதில் 35 மாணவ, மாணவிகள் காலை உணவு சாப்பிட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் அதே பகுதியைச் சேர்ந்த கோமதி என்ற ெபண் பள்ளியில் மாணவர்களுக்கு காலையில் வழங்கப்பட்ட உப்புமா சரியாக வேகாமல் கட்டி கட்டியாக உள்ளது என கூறி நேற்று காலை பள்ளிக்குச் சென்று இப்படி செய்தால் எப்படி எங்கள் குழந்தைகள் சாப்பிடுவார்கள் எனக்கூறி வகுப்பறையை பூட்டியதாக கூறப்படுகிறது. இதனால் காலை உணவு சாப்பிட வந்த பள்ளி குழந்தைகள் தவித்தனர். பின்னர் இது பற்றி காடையாம்பட்டி தாசில்தார் தமிழரசி, வட்டார வளர்ச்சி அலுவலர் உமா சங்கர் ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர்.உடனே அந்த பள்ளிக்கு சென்ற தாசில்தார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் வகுப்பறையை திறக்க நடவடிக்கை எடுத்தனர். தொடர்ந்து பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. அதிகாரிகளும் குழந்தைகளுடன் அமர்ந்து சாப்பிட்டனர். இது குறித்து காடையாம்பட்டி தாசில்தார் தமிழரசி விசாரணை நடத்தி வருகிறார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து கஞ்சநாயக்கன்பட்டி அப்பகுதி மக்கள் கூறும் போது,' காலை உணவில் எவ்வித குறைகளும் இல்லாத நிலையில் குறிப்பிட்ட பெண் வேண்டும் என்று தகராறு செய்யும் நோக்கில் திட்டமிட்டு வந்து குழந்தைகள் காலை உணவை சாப்பிட முடியாமல் பள்ளி வகுப்பறையை பூட்டி உள்ளார்' என்று குற்றம்சாட்டினர்.

மேலும் செய்திகள்