வீட்டில் தனியாக இருந்த பெண் இரும்பு கம்பியால் அடித்துக்கொலை
வீட்டில் தனியாக இருந்த பெண்ணை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
வீட்டில் தனியாக இருந்த பெண்ணை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பெண்ணிடம் தகராறு
விருதுநகர் அருகே உள்ள பெரியபேராலி கிராமம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் கோபால். கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சரசுவதி. இவர் நேற்று காலை தனது குழந்தையை பள்ளியில் கொண்டு போய் விட்டு விட்டு வீட்டில் தனியாக இருந்தார்.
அப்போது அதே கிராமத்தை சேர்ந்த சுருளீஸ்வரன் (வயது 32) என்பவர் சரசுவதி வீட்டிற்குள் நுழைந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், சுருளீஸ்வரனை வெளியே போகும் படி கூறியதாக தெரிகிறது. ஆனால் சுருளீஸ்வரன் சரசுவதியுடன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
அடித்துக்கொலை
திடீரென தான் வைத்திருந்த இரும்பு கம்பியால் சரசுவதியின் தலையில் தாக்கிவிட்டு, சுருளீஸ்வரன் அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.
படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய சரசுவதியை உடனடியாக அக்கம்பக்கத்தினர் மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பாண்டியன் நகர் போலீசார், பெரியபேராலி கிராமத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சரசுவதி வீட்டுக்கு செல்லும் வழியில் சுருளீஸ்வரன் மற்றொரு பெண்ணையும் தாக்கியது தெரியவந்தது. சுருளீஸ்வரனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.