இரும்பு கதவு சாய்ந்து விழுந்ததில் சிறுமி சாவு
ஆலங்குளம் அருகே இரும்பு கதவு சாய்ந்து விழுந்ததில் சிறுமி பரிதாபமாக இறந்தாள்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே இரும்பு கதவு சாய்ந்து விழுந்ததில் சிறுமி பரிதாபமாக இறந்தாள்.
கோவில் விழாவுக்கு...
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள கிடாரகுளத்தை சேர்ந்தவர் லட்சுமணன். இவருக்கு மங்களேஸ்வரி, ராமலட்சுமி என்று 2 மகள்கள் உள்ளனர். மங்களேஸ்வரிக்கு, கீழப்பாவூரை சேர்ந்த கருப்பசாமி என்பவருடன் திருமணம் நடந்து, ஒரு மகனும், கவிஸ்ரீ (வயது 5) என்ற மகளும் இருந்தனர். ராமலட்சுமிக்கு பாம்புக்கோவில் சந்தையை சேர்ந்த மாரியப்பன் என்பவருடன் திருமணம் முடிந்து ஒரு மகனும், முகுந்தினி (7) என்ற மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் கிடாரகுளத்தில் கோவில் திருவிழா என்பதால், லட்சுமணன் தனது இரு மகள்களையும் விருந்துக்கு அழைத்தார். இதனால் அவர்கள் தங்களது குடும்பத்துடன் கிடாரகுளத்துக்கு வந்தனர்.
இரும்பு கதவு சாய்ந்தது
நேற்று இரவு சிறுமிகள் கவிஸ்ரீ, முகுந்தினி ஆகியோர் வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது பக்கத்து வீட்டின் சுவரில் இரும்பு கதவை கழற்றி சாய்த்து வைத்து இருந்தனர்.
அந்த கதவு மீது சிறுமிகள் ஏறி நின்று விளையாடினர். அப்போது எதிர்பாராதவிதமாக கதவு சாய்ந்து சிறுமிகள் மீது விழுந்தது. இதில் கவிஸ்ரீ படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். முகுந்தினி லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
பரிதாப சாவு
உடனே கவிஸ்ரீயை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். கவிஸ்ரீயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்ைட ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரும்பு கதவு சாய்ந்து விழுந்ததில் சிறுமி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.