வீட்டில் கியாஸ் கசிந்து தீப்பிடித்தது;தம்பதி உடல் கருகி பலி

கோவில்பட்டியில் வீட்டில் கியாஸ் கசிந்து தீப்பிடித்தது தம்பதி உடல் கருகி பலியாகினர்.

Update: 2023-02-03 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் அடுப்பை அணைக்காமல் விட்டதால் வீட்டில் கியாஸ் கசிந்து தீப்பிடித்ததில் தம்பதி உடல் கருகி பரிதாபமாக இறந்தனர்.

தம்பதி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இந்திரா நகரைச் சேர்ந்தவர் சண்முகபாண்டி (வயது 73). கொத்தனார். இவருடைய மனைவி ராமலட்சுமி (62). இவர்களுக்கு குழந்தை இல்லை.

கடந்த 31-ந்தேதி இரவு ராமலட்சுமி வீட்டில் கியாஸ் அடுப்பில் சமையல் செய்து விட்டு அடுப்பை சரியாக அணைக்காமல் விட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதனால் கியாஸ் கசிந்து அந்த அறை முழுவதும் பரவி இருந்தது.

தீயில் கருகினர்

மறுநாள் காலையில் ராமலட்சுமி எழுந்து டீ போடுவதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்தார். அப்போது அறை முழுவதும் கியாஸ் பரவி இருந்ததால் குபீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதில் கணவன், மனைவி இருவரும் உடல் கருகி வேதனை தாங்க முடியாமல் அலறி துடித்தனர்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் கோவில்பட்டி மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அரிகண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பரிதாப சாவு

பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி சண்முகபாண்டி, ராமலட்சுமி இருவரும் நேற்று முன்தினம் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர்.

இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் கியாஸ் கசிந்து தீப்பிடித்ததில் தம்பதி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்