தோட்டத்தொழிலாளி வீட்டின் கதவை உடைத்த அரிக்கொம்பன் காட்டுயானை
கேரளாவில் மனிதர்களை கொன்றதால் மயக்க ஊசி செலுத்தி பிடித்து அப்புறப்படுத்தப்பட்ட அரிக்கொம்பன் காட்டுயானை ஹைவேவிஸ் மலைப்பகுதிக்குள் நுழைந்தது. அங்கு தோட்டத்தொழிலாளியின் வீட்டின் கதவை உடைத்ததால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
அரிக்கொம்பன் காட்டுயானை
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், சின்னக்கானல், சாந்தம்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் அரிக்கொம்பன் என்று பெயரிட்டு அழைக்கப்படும் காட்டுயானை கடந்த சில ஆண்டுகளாக மக்களுக்கும், விவசாய நிலங்களுக்கும் தொடர்ந்து பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தன. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 8 பேரை கொன்றதுடன், ஏராளமான விளை பயிர்களையும் நாசம் செய்து வந்தது.
இந்த காட்டுயானை சில நாட்களுக்கு முன்பு கேரள வனத்துறையினரால் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. பின்னர் இந்த யானை பலத்த பாதுகாப்புடன் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, தேக்கடி பெரியாறு புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மேதகானம் வனப்பகுதியில் விடப்பட்டது.
வீட்டுக் கதவு உடைப்பு
தமிழக-கேரள மாநில எல்லையான இப்பகுதியில் யானையை விடும் முன்பு அதன் கழுத்தில், ரேடியோ காலர் என்ற கருவி பொருத்தப்பட்டது. அதன் மூலம் யானையின் நடமாட்டம் இருக்கும் இடத்தை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். 2 நாட்களுக்கு முன்பு அந்த யானை மங்கலதேவி கண்ணகி கோவில் பகுதியில் உலா வந்தது. பின்னர், தமிழக பகுதியான கூடலூர் அருகே வண்ணாத்திப்பாறை என்ற இடத்தில் உலா வந்தது. நேற்று முன்தினம் அந்த யானை அங்கிருந்து கேரள மாநிலம் மாவடி பகுதிக்கு சென்றது.
மற்ற காட்டுயானைகளுடன் சேராமல் தொடர்ந்து தனியாக அந்த யானை சுற்றி வருகிறது. இந்நிலையில், நேற்று அதிகாலையில் ஹைவேவிஸ் மலைப்பகுதியில் இரவங்கலாறு என்ற இடத்தில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பில் நாய்கள் தொடர்ந்து குரைத்துக் கொண்டு இருந்தன. அப்போது தொழிலாளி ஒருவர் வீட்டுக்கு வெளியே பார்த்தபோது, அதே பகுதியை சேர்ந்த கருப்பசாமி என்ற தோட்ட தொழிலாளியின் வீட்டின் முன்பு ஒரு யானை நின்றது. அந்த யானை திடீரென கருப்பசாமி வீட்டின் கதவை உடைத்தது. பின் வாசல் வழியாக வீட்டுக்குள் தும்பிக்கையை விட்டு, அங்கு வைக்கப்பட்டு இருந்த அரிசி மூட்டையை வெளியே இழுத்து அதை தின்றதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த யானை அங்கிருந்து சென்று விட்டது.
மக்கள் அச்சம்
யானையை பார்த்த நபர், அதன் கழுத்தில் ஏதோ கட்டப்பட்டு இருந்ததாக கூறினார். இதனால், அந்த யானை கேரளாவில் அட்டகாசம் செய்த அரிக்கொம்பன் யானையாக இருக்குமோ என்ற பயம் மக்களிடம் பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும், சின்னமனூர் வனச்சரகர் சிவாஜி தலைமையில் வனத்துறையினர் அங்கு வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர். அங்கு யானையின் கால் தடம் பதிந்து இருந்தது. தேயிலை தோட்டப் பகுதியிலும் யானை உரசிச் சென்ற தடங்கள் பதிவாகி இருந்தது.
இதையடுத்து அரிக்கொம்பன் யானையில் பொருத்தப்பட்ட கருவியை வைத்து கண்காணித்த போது அந்த யானை தான் இரவங்கலாறு பகுதிக்கு அதிகாலை வந்து போனதாக வனத்துறையினருக்கு தெரியவந்தது. இதை அறிந்த ஹைவேவிஸ் மலைப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 'யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மக்கள் அச்சப்பட வேண்டாம். எதிர்பார்த்ததை விடவும் அந்த யானை வேகமாக காட்டுக்குள் உலா வருகிறது. ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு மற்ற யானைகளை காட்டிலும் வேகமாக செல்கிறது. வனத்துறையின் வழிகாட்டுதல்களை மக்கள் பின்பற்ற வேண்டும். காட்டுக்குள் யாரும் அத்துமீறி செல்லக்கூடாது' என்றார்.