ஆறுகளில் தண்ணீர் வரத்து குறைந்தது

கூடலூர் பகுதியில் மழை பெய்யாததால் ஆறுகளில் தண்ணீர் வரத்து குறைந்தது.

Update: 2022-11-14 18:45 GMT

கூடலூர், 

கூடலூர் பகுதியில் மழை பெய்யாததால் ஆறுகளில் தண்ணீர் வரத்து குறைந்தது.

கரைபுரண்டு ஓடிய வெள்ளம்

கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் ஆண்டுதோறும் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை என 6 மாதங்கள் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து கூடலூர் பகுதியில் உள்ள மாயாறு, பாண்டியாறு, சோலாடி, பொன்னானி உள்பட அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் கரை புரண்டு ஓடுவது வழக்கம்.

மேலும் வனம் பசுமையாக மாறிவிடுவதால் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு பிரச்சினைக்கும் தீர்வு ஏற்படுகிறது. இதேபோல் பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாக திகழும் அனைத்து தடுப்பணைகளிலும் தண்ணீர் வரத்து அதிகமாக காணப்படும். இதன் காரணமாக குடிநீர் தட்டுப்பாடு நீங்குகிறது. இந்த நிலையில் நடப்பு ஆண்டில் அதிக கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

தண்ணீர் வரத்து குறைந்தது

தற்போது மழை படிப்படியாக குறைந்து விட்டதால் அனைத்து நீர் நிலைகளிலும் தண்ணீர் வரத்தும் குறைந்து விட்டது. தொடர்ந்து தடுப்பணைகளிலும் தண்ணீர் இருப்பு குறைந்து வருகிறது. இதன் காரணமாக வரும் நாட்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை காணப்படுகிறது. இதேபோல் பனிப்பொழிவு மற்றும் வெயில் அதிகரித்து வனப்பகுதியில் வறட்சியான காலநிலை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

மழைக்காலம் முடிவடையும் நிலையில் உள்ளது. இதன் காரணமாக அனைத்து நீர் நிலைகளிலும் தண்ணீர் வரத்து குறைந்து விட்டது. இதை கருத்தில் கொண்டு கோடை காலத்தை சமாளிக்க மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்