வெள்ளநீர் கால்வாய் திட்டப்பணிகள் வருகிற டிசம்பர் மாதம் முடிவடையும்- அமைச்சர் துரைமுருகன்

வெள்ளநீர் கால்வாய் திட்டப்பணிகள் வருகிற டிசம்பர் மாதம் முடிவடையும் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

Update: 2023-05-08 21:17 GMT

நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் இருந்து வெள்ளக்காலங்களில் வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை வறட்சி பகுதிகளான நாங்குநேரி, திசையன்விளை, ராதாபுரம், எம்.எல்.தேரி, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் உள்ளிட்ட விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில், தாமிரபரணி ஆற்றில் கன்னடியன் கால்வாயில் இருந்து வெள்ளநீர் கால்வாய் அமைத்து தாமிரபரணி, நம்பியாறு, கருமேனியாறு ஆகியவற்றை இணைக்கும் வகையில் கடந்த 2009-ம் ஆண்டு ரூ.369 கோடி மதிப்பில் அப்போதைய முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதியால் நதிநீர் இணைப்பு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த பணிகள் கடந்த சில ஆண்டுகளாக மந்தமாக நடந்த நிலையில் தற்போது ரூ.800 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் சபாநாயகர் அப்பாவு, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கலெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் மூன்றாம் கட்ட திட்டப்பணிகள் நடந்து வரும் நெல்லை மாவட்டம் பொன்னாக்குடி, பரப்பாடி, தூத்துக்குடி மாவட்டம் எம்.எல்.தேரி, பொன்னாக்குடி, ஆகிய பகுதிகளில் நீர்வளத்துறை, பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது பணிகள் நிறைவடையாத பகுதிகளில் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் துரைமுருகன் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வெள்ளநீர் கால்வாய் திட்டப்பணியை 2009-ம் ஆண்டு நாங்கள் தொடங்கி 2011-ம் ஆண்டு வரை 50 சதவீத பணிகளை முடித்திருந்தோம். அதன்பிறகு பணி நடைபெறவில்லை. தற்போது நெடுஞ்சாலை துறையில் பாலம் அமைக்கும் பணி திட்டம் மிகவும் மந்தமாக நடந்து வருகிறது. இந்த பணி எத்தனை சதவீதம் நடந்துள்ளது என்று கூற முடியாது. எப்போது முழுமையடையும் என்றே தெரியாத அளவிற்கு உள்ளது. டிசம்பர் மாதத்திற்குள் பணியை முடித்து திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கூறியுள்ளோம். திட்டப்பணிகள் டிசம்பர் மாதம் நிறைவடையும் என்று நம்புகிறேன். செப்டம்பர் மாதம் தண்ணீர் திறந்து விடப்படும். திட்டத்துக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு கூட கடந்த ஆட்சி காலத்தில் பணம் கொடுக்கவில்லை. அதற்கும் நாங்கள் தான் நிதி ஒதுக்கி உள்ளோம். நிலம் கொடுத்தவர்களுக்கு பணம் கொடுக்க கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜம்புநதி-ராமநதி மேல்மட்ட கால்வாய் திட்டம் நிறைவேற்ற வனத்துறை அனுமதி அளிக்க வேண்டி இருக்கிறது. வனத்துறை அனுமதி கிடைத்தால் தான் அந்த திட்டத்தை நிறைவேற்ற முடியும். நான் அடுத்த மாதம் ராமநதி பகுதிக்கு சென்று ஆய்வு நடத்த உள்ளேன். அதன்பிறகு அந்த திட்டம் குறித்து விரிவாக சொல்லப்படும்.

தென்காசி மாவட்டத்தில் நீர்வளத்துறை பாலத்தில் வெடிகுண்டு வைத்து வெடிப்பது போல் திரைப்படம் எடுப்பதற்கு யார் அனுமதி அளித்திருந்தாலும் தவறு செய்தவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன். தூண்டில் வளைவு பசுமை தீர்ப்பாயம் கூறுகின்ற அளவின்படி அமைப்பது கடினம் தான்.

தாமிரபரணி ஆறு எனக்கு மிகவும் பிடித்தது. அதை மனைவியை அழகாக பாதுகாப்பது போல் பாதுகாக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை. மணல் பிரச்சினையில் சிலர் துஷ்பிரயோகம் செய்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கேரளாவிற்கு கல் உள்ளிட்ட கனிமவளம் எடுத்துச் செல்வதற்கு உச்சநீதிமன்றமே அனுமதித்துள்ளது இதனால் தான் கல் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. பெரிய லாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக எடுத்துச் சென்றால் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்